சென்னை தியாகராயர் நகரில் சீல் வைக்கப்பட்ட கடைகளை திறக்க உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக அனுமதி அளித்துள்ளது.
சென்னை தியாகராயநகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சீல் வைத்தது. இதை எதிர்த்து வியாபாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், "உயர் நீதிமன்றம் அமைத்து இருக்கும் கண்காணிப்பு குழுவிடம் வியாபாரிகள் தங்கள் கோரிக்கையை தெரிவிக்கலாம்'' என்று அறிவித்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து வியாபாரிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், "புத்தாண்டு, பொங்கல் திருநாள் ஆகிய காலத்தில் வியாபாரம் நன்றாக இருக்கும். தற்போது கடைகள் மூடப்பட்டு உள்ளன. எனவே பொங்கல், புத்தாண்டு விற்பனையை கருத்தில் கொண்டு, சீல் வைக்கப்பட்டு இருக்கும் கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு, பொங்கல் பண்டிகையையொட்டி கடைகளை 6 வாரம் திறந்திருக்க தற்காலிகமாக அனுமதி அளித்தது.
வியாபாரிகளின் மனுவை விரைந்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் இறுதி உத்தரவை பெற உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.