பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றை சிலர் வரவேற்றிருப்பதாக வந்துள்ள செய்திக்கு பதில் அளித்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, "பராசக்தி'' திரைப்படத்தின் "கா...கா...கா...'' என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
தேர்வாணையக் கழகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் வீடுகளில் எல்லாம் சோதனை நடைபெற்றிருக்கிறதே? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள கருணாநிதி, தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது என்பது சரியானது தான். ஆனால் பிடிக்காதவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுப்பது சரியானது தானா என்றுதான் இந்த ஆட்சியினரின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது தோன்றுகிறது.
நமக்குக் கிடைத்த தகவலின்படி, தேர்வாணையக் கழகத் தலைவரும், உறுப்பினர்களும் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்களுக்குப் பதிலாக தங்களுக்கு வேண்டியவர்களை நியமனம் செய்வதற்காகவே, இதுவரை பொறுப்பிலே உள்ளவர்களை தாங்களாகவே பதவிகளிலிருந்து விலகிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், அவர்கள் அதற்கு இசைவளிக்காத நிலையில் இப்படியெல்லாம் பயமுறுத்திப் பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் நேற்றையதினம் தேர்வாணையக் கழகத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் வீடுகளில் எல்லாம் சோதனைகள் நடைபெற்றுள்ளன என்று கூறியுள்ளார்.
பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றை தென்னிந்திய வர்த்தகசபையினரும், தனியார் பேருந்து உரிமையாளர்களும் வேறு சிலரும் வரவேற்றிருப்பதாகச் செய்தி வந்திருக்கிறதே? என்ற மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர், "பராசக்தி'' திரைப்படத்தின் "கா...கா...கா...'' என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சி ஒரே நேரத்தில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு ஆகியவற்றையெல்லாம் அறிவித்து விட்டு, அதற்கு மத்திய அரசும், கடந்த கால தி.மு.க. அரசும் தான் காரணம் என்று சொல்கிறார்களே, அ.தி.மு.க. அரசு இந்தச் செலவைத் தவிர்த்திருக்கலாம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு கூறுங்களேன்? என்ற கேள்விக்கு கருணாநிதி அளித்துள்ள பதிலில், சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றிய வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒரு தைரியத்தில் பழைய பாடத் திட்டத்தின்கீழ் அவசர அவசரமாக ரூ.200 கோடி செலவில், தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள அச்சகங்களில், பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன.
உச்ச நீதிமன்றம் சமச்சீர் கல்வித் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதை அடுத்து ஏற்கனவே அச்சிடப்பட்டு தயாராக இருந்த சமச்சீர் கல்விப் புத்தகங்களில் சில பகுதிகளை நீக்கிவிட்டு அந்தப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. அவசர அவசரமாக ரூ.200 கோடி செலவில் ஆட்சியாளர்கள் பழைய பாடத் திட்டத்தின்கீழ் அச்சடிக்கச் சொன்ன புத்தகங்களின் கதி என்ன? சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கழக ஆட்சியில் ஓமந்தூரார் வளாகத்தில் தலைமைச் செயலகம் கட்டப்பட்டு, திறப்பு விழாவும் பிரதமரால் நடைபெற்றுவிட்டது.
அதைக் கண்டவர்கள் எல்லாம் பாராட்டினர். ஆனால் அந்தக் கட்டிடம் ஆறு மாத காலமாக அப்படியே கிடக்கிறது! யார் வீட்டுப் பணம்? மக்கள் தந்த வரிப்பணம்! பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகத்தை இரவோடு இரவாகத் தூக்கி எங்கே போட்டார்கள் என்றே தெரியவில்லை. அங்கே இருந்த அரிய நூல்கள் எல்லாம் என்னவாயின என்று தெரியவில்லை. தமிழ்நாட்டு மக்களே! ஒரே நாளில் அ.தி.மு.க.வுக்கு வாக்குகளைக் குவித்து வெற்றி பெறச் செய்த உங்களுக்கு இந்தக் காரியங்கள் சம்மதம் என்றாலும் எனக்கு சம்மதம் இல்லைதான்! என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான "டாஸ்மாக்'' மது பானக் கடைகள் இருக்கும்போது, வெளிநாட்டு மதுபானங்களை விற்க "எலைட் ஷாப்''கள் தேவைதானா? என்ற மற்றொரு கேள்விக்கு, தேவையா இல்லையா என்பதை நம்மைக் கேட்டா முடிவு செய்கிறார்கள்? தமிழ்நாட்டில் மொத்தம், 6,696 "டாஸ்மாக்'' கடைகள் உள்ளன. இவை தவிர வெளிநாட்டு மதுவகைகளை "டாஸ்மாக்'' கடைகளில் விற்பதற்குப் பதிலாக, குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய மதுக்கடைகளை "எலைட் ஷாப்'' என்ற பெயரில் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதன் அருகிலேயே ஏ.சி. பார் தொடங்கவும் திட்டமிட்டிருப்பதாகவும், புதிய மதுக்கடைகளை அரசு நடத்தும் என்றாலும், ஏ.சி. பார்கள் தனியாரால் நடத்தப்படும் என்றும் செய்திகள் வந்துள்ளன.
சிறிது நாட்களுக்குப் பிறகு இந்தப் புதிய மதுக்கடைகள் பெரிய "ஷாப்பிங் மால்''களில் ஏ.சி. பார் வசதியுடன் திறக்கப்படவுள்ளன என்றும் தெரிகிறது. அதற்கான உரிமம் பெற இப்போதே "ஷாப்பிங்மால்'' உறுப்பினர்கள் அதற்கான "முஸ்தீப்''களுடன் மேலிடத்தைச் சந்திக்க முயற்சிக்கத் தொடங்கி விட்டார்களாம். அ.தி.மு.க.விற்கு வாக்களித்த மக்களுக்காக ஜெயலலிதா அரசின் மற்றொரு சாதனைத் திட்டம் இது என்று கருணாநிதி கூறியுள்ளார்.