பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சிறையிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டு உதவிட வேண்டும் என்று பிரதமர், சோனியா காந்திக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாற்றப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, இருபதாண்டு காலத்திற்கு மேலாக சிறையிலே வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக அரசு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநனருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அனைவரும் கேட்டுக்கொண்டு பல நாட்களாகியும், தமிழக அரசு அதற்கு முன் வரவில்லை என்று கருணாநிதி கூறியுள்ளார்.
மத்திய அரசாவது இவர்கள் மூவரையும் சிறையிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டு உதவிட வேண்டும் என்று பிரதமரையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வழிகாட்டும் தலைவி சோனியா காந்தியையும் தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்வதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.