எதிர்பாராத விதமாக 4 நாட்களில் 1026 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை போக்க வெளி மாநிலத்தில் மின்சாரம் வாங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற உடன் மின் நிர்வாகத்தில் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாக சென்னை நீங்கலாக மாநிலத்தின் பிற இடங்களில் இருந்து வந்த மூன்று மணி நேர மின் தடை 1.7.2011 முதல் இரண்டு மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.
மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறை நிலையை சீராக்க குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களின் அடிப்படையில் எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பழுதடைந்த மின் நிலையங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மின் திட்டங்களை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளையும் எனது அரசு மேற்கொண்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ்நாட்டில் மின்வெட்டு அறவே நீக்கப்படும் வகையில் எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் தெலங்கானாவை தனி மாநிலமாகப் பிரிக்கக் கோரி நடைபெற்று வரும் போராட்டத்தின் காரணமாக சிங்கரேனி நிலக்கரி சுரங்கத்தில் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
அதன் காரணமாக தேசிய அனல்மின் கழகத்தின் ராமகுண்டம் அனல் மின் நிலையத்தில் 1100 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி குறைந்து விட்டது. இதன் விளைவாக, ராமகுண்டம் அனல் மின் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மின் அளவில் பாதி அளவு மின்சாரம் தான் தற்போது கிடைக்கப் பெறுகிறது.
அதே போல் ஒரிசா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக தால்ச்சர் அனல் மின் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய மின்சார அளவும் குறைந்துள்ளது. மேலும், மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களான நெய்வேலி அனல் மின் நிலையம், கல்பாக்கம் அணு மின் நிலையம், கர்நாடகா மாநிலத்தில் உள்ள கைகா அணு மின் நிலையம், ஆந்திரா மாநிலத்தில் உள்ள சிம்மாத்ரி அனல் மின் நிலையம் ஆகியவற்றில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்கப் பெற வேண்டிய மின்சாரத்தின் அளவிலும் குறைவு ஏற்பட்டுள்ளது.
இவற்றின் காரணமாக கடந்த நான்கு நாட்களில் தமிழகத்திற்கு கிடைக்கப் பெற வேண்டிய மின்சாரத்தின் அளவில் 1026 மெகாவாட் குறைந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் எதிர்பாராத மின்தடை ஏற்பட்டு வருகிறது.
மேலும், தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரத்தின் மொத்த நிறுவு திறன் 6007 மெகாவாட் ஆக இருந்தாலும், காற்றாலை மூலம் எப்போதும் ஒரே அளவில் மின்சாரம் கிடைப்பதில்லை. தற்போது காற்றின் அளவு குறைந்துள்ளதால் காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் வெகுவாகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் மின்தடையை நீக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எனது அரசு எடுத்து வரும் நிலையில், எதிர்பாராத விதமாக கடந்த நான்கு நாட்களாக ஏற்பட்டுள்ள 1026 மெகாவாட் மின்சார குறைபாட்டை ஈடு செய்தால் தான் தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையிலேயே மின்சாரத்தை தமிழக மக்களுக்கு வழங்க இயலும். கடந்த நான்கு நாட்களாக ஏற்பட்டு வரும் எதிர்பாரா மின் தடையையும், அதன் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களைத் தவிர்த்திடவும் இயலும்.
எனவே, ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்று வரும் தெலங்கானா போராட்டம், ஒரிசா மாநில வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட மின் உற்பத்திக் குறைவு போன்ற காரணங்களால் ஏற்பட்ட மின்சார குறைபாட்டு பிரச்சனை தீரும் வரை வெளிச் சந்தையில் மின்சாரத்தை வாங்கி தற்போது ஏற்பட்டுள்ள மின்சாரக் குறைபாட்டை உடனடியாக ஈடு செய்ய வேண்டும் என்று நான் உத்தரவிட்டுள்ளேன். அந்த அடிப்படையில், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளிச் சந்தையில் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும். இவ்வாறு வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவதன் மூலம், தற்போது ஏற்பட்டுள்ள மின்சாரக் குறைபாடு சீர் செய்யப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.