முதல் முறையாக உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற பகுதிகளில் வாக்குப்பதிவுக்கு மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும். அதாவது மேயர் அல்லது தலைவர் பதவி வாக்குப்பதவிக்காக ஒரு எந்திரமும், வார்டு உறுப்பினர் பதவி வாக்குப்பதிவுக்காக மற்றொரு எந்திரமும் வைக்கப்பட்டு இருக்கும்.
மேலும் இந்த உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக ஆன்லைன் மூலம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்பை அரசு ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்குவார்கள். பூத் சிலிப்பை பெற்றுக்கொண்டதை உறுதி செய்யும் வகையில் கையெழுத்தும் பெறுவார்கள். வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று அந்த பூத் சிலிப்பை வாக்கு அளிக்க வேண்டும்.
அரசு ஊழியர்கள் பூத் சிலிப் வழங்குவதற்காக வரும் போது சிலர் வீட்டில் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் வாக்குச்சாவடியின் முன் இருக்கும் அரசு பணியாளரிடம் இருந்து பூத் சிலிப்பை பெற்றுக்கொண்டு வாக்கு அளிக்கலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தேர்தல் பார்வையாளராக பணியாற்றுவார். மேலும், மாவட்ட கலெக்டர்கள் அவர்களுக்கு உதவி செய்வதற்காக துணை ஆட்சியர் அந்தஸ்தில் துணை பார்வையாளர்களும் நியமிக்கப்படுவார்கள். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு வீடியோ மூலம் பதிவு செய்யப்படும்.
சட்டசபை தேர்தலுக்கான அனைத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உள்ளாட்சி தேர்தலுக்கும் பொருந்தும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன என்று சோ.அய்யர் கூறினார்.