''கழகமே குடும்பம் என்று இருந்த தி.மு.க.வில், தன் குடும்ப உறுப்பினர்களை புகுத்தி, குடும்பமே கழகம் என்று ஆக்கிவிட்டார் கருணாநிதி'' என்று முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம்சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று'' - என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க வாழ்ந்து காட்டியவர் பேரறிஞர் அண்ணா. அவரின் 103-வது பிறந்த நாள் நமக்கெல்லாம் ஒரு பொன்னாள். மக்கள் மனதில் பதியும் வண்ணம் ஆழமான கருத்துகளைத் தந்து, தூங்கிக் கிடந்த மக்களை தட்டி எழுப்பியவர் பேரறிஞர் அண்ணா. இவரின் கருத்துகள் அனைவரையும் வசீகரிக்கும் விதமாகவும், வாழ்வில் வளம் சேர்க்கும் விதமாகவும் அமைந்தன.
தன்னுடைய பேச்சாற்றலின் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த அண்ணா அவர்களுடைய பேச்சில், மெல்லிய பூங்காற்று போன்ற இனிய நடையுண்டு; ஆற்றொழுக்கு போன்ற அழகிய நடையுண்டு; கோடையிடி போன்ற ஓசையுண்டு; கொண்டல் என பொழியும் சொல்மாரி உண்டு; ஆழம் மிக்க கருத்துகள் உண்டு. இலக்கிய தமிழும், அடுக்கு நடையும், எதுகை, மோனை நயங்களும் அவரது பேச்சில் துள்ளி விளையாடும். அண்ணாவின் கவிதைகள் கற்பவரின் நெஞ்சை கவர்பவையாக இருந்தன. தன்னுடைய நேர்மை திறத்தாலும், நெஞ்சுறுதியாலும், கொள்கை உரத்தாலும் தென்னாட்டு காந்தி எனும் சிறப்பினைப் பெற்று, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா.
தமிழ்நாடு என்று பெயர் மாற்றம், இருமொழிக் கொள்கைச் சட்டம், சுயமரியாதை திருமணச் சட்டம், உலகத் தமிழ் மாநாடு என குறுகிய காலத்தில் அளப்பறிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டியவர் அண்ணா. தமிழினப் பாதுகாவலராக விளங்கியதோடு மட்டுமல்லாமல் தமிழினத்தை தலை நிமிரச் செய்த அண்ணா மறைவிற்குப் பிறகு, குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்தார் கருணாநிதி. ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன், கழகமே குடும்பம் என்று இருந்த திமுகவில், தன் குடும்ப உறுப்பினர்களை புகுத்தி, குடும்பமே கழகம் என்று ஆக்கிவிட்டார் கருணாநிதி என்று ஜெயலலிதா குற்றம்சாற்றியுள்ளார்.