கிரானைட் குவாரிகளில் கொள்ளையடித்ததாக கூறப்பட்ட புகாருக்கான ஆதாரத்தை அமைச்சர் வேலுமணி 15 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்றும் ஆதாரத்தை வெளியிட தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தி.மு.க. தென்மண்டல அமைப்பாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று நடந்த தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய புதிய தமிழகம் உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி, மதுரை வட்டாரத்தில் கடந்த ஆட்சியில் மு.க.அழகிரி மற்றும் அவரது கூட்டாளிகள் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் குவாரிகளில் கொள்ளையடித்ததாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அரசு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுமா? அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் வேலுமணி, மு.க.அழகிரி, அவரது கூட்டாளிகள் ஏராளமான குவாரிகளில் இப்படி கொள்ளையடித்தனர். அந்த குவாரிகளின் லைசென்சு தான் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் உரிய தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்த நிலையில் அமைச்சர் வேலுமணி கூறிய புகாருக்கான ஆதாரத்தை தரக்கோரி சபாநாயருக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கிரானைட் தொழிலில் தாம் ஈடுபட வில்லை என்றும் தமது புகழுக்கு அமைச்சர் வேலுமணி களங்கம் ஏற்படுத்திவிட்டதாகவும் அழகிரி தெரிவித்துள்ளார்.
புகாருக்கான ஆதாரத்தை அமைச்சர் வேலுமணி 15 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்றும் ஆதாரத்தை வெளியிட தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.