இலங்கை பொருட்களை புறக்கணியுங்கள்: மெரினாவில் பரப்புரை
, திங்கள், 1 ஆகஸ்ட் 2011 (21:47 IST)
தமிழினப் படுகொலை செய்த இலங்கையின் தயாரிப்புகளை புறக்கணிக்குமாறும், அந்நாட்டிற்கு சுற்றுலா செல்லாதீர்கள் என்றும், இலங்கை நாட்டை எல்லாவிதத்திலும் புறக்கணிக்குமாறும் கோரி உலகத் தமிழர் அமைப்பின் சார்பாக சென்னை மெரினாவில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
வெள்ளிக்கிழமை மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலையருகே நடைபெற்ற இந்தப் பரப்புரையை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு சென்றனர். பலரும் இலங்கையை புறக்கணிப்போம் என்று கூறும் பதாகையில் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவைத் திரட்டினர்.உணர்வாளர்கள், தோழர்கள் பலர் வந்திருந்து பரப்புரையில் ஈடுபட்டனர். ஒரு குழு துண்டறிக்கை கொடுக்க, ஒரு குழு மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல, மறு குழு அவர்களை கையெழுத்து போட பதாகைக்கு அனுப்பிய வண்ணம் இருந்தனர்.