தமிழக அரசுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடன் இருப்பதால் பொருட்களின் மீது வரி விதித்து இருப்பது தவிர்க்க முடியாதது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில குழு கூட்டம் சென்னையில் வரும் 23ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடக்கிறது என்றார்.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் விலைவாசி உயர்ந்து விட்டது என்றும் விலைவாசி உயர்வினாலும், ஊழலாலும் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூலம் மத்திய அரசு பலவீனமான அரசு என்பதை காட்டுகிறது என்று கூறிய தா.பாண்டியன், செயல் இழந்த அரசாக விளங்கும் மத்திய அரசு உரிய முடிவுகளை உரிய காலத்தில் எடுக்க முடியவில்லை என்று குற்றம்சாற்றினார்.
இலங்கையில் தமிழர்களை கொன்ற ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவித்து பகிரங்கமாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. சபை அறிவித்த பின்னரும்கூட, இந்த கோரிக்கையை மத்திய அரசு வலியுறுத்தவில்லை என்றும் இந்த கோரிக்கையை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு வலியுறுத்தி உள்ளது என்றும் அவர் கூறினார்.
சமச்சீர் கல்வியை முறையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய தா.பாண்டியன், தமிழக அரசுக்கு ரூ.98 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக முந்தைய அரசு அறிவித்தது என்றும் ஆனால் அரசுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடன் இருப்பது தெரியவந்துள்ளது என்றும் இதற்கு அசல், வட்டியை அரசு செலுத்த வேண்டியது உள்ளதால் பொருட்களின் மீது வரி விதித்து இருப்பது தவிர்க்க முடியாதது என்றும் தெரிவித்தார்.