எப்போது வருவார் எப்படி வருவார் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் வரவேண்டிய நேரத்தில சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டிப்பாக வருவார் என்று அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் தெரிவித்தார்.
மூச்சுதிணறல், சிறுநீரக பாதிப்பு போன்ற உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் ஒரு மாதமாக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ரஜினிகாந்த் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அண்மையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் ரஜினிகாந்தை பார்த்து விட்டு நடிகர் தனுஷ் நேற்றிரவு 10.30 மணிக்கு சென்னை திரும்பினார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் என்றார்.
தனி வீட்டில் அவர் தங்கி இருந்த படியே, மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தனுஷ் கூறினார்.
ரஜினிகாந்த் எப்போது சென்னை திரும்புவார் என்று கேட்டதற்கு, அவர் எப்போது வருவார் எப்படி வருவார் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் வரவேண்டிய நேரத்தில கண்டிப்பாக வருவார் என்றார் தனுஷ்.