சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட 4 பேரும் நேரில் ஆஜராவது தொடர்பாக வரும் 8ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி வந்தார். இதனிடையே தமிழக அட்வகேட் ஜெனரலாக நவநீதகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நீதிபதி மல்லிகார்ஜுனா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணனுக்கு பதிலாக தான் ஆஜராக இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர் குமார் தெரிவித்தார்.
மேலும் ஆவணங்களை படித்து பார்க்க 4 வாரம் அவகாசம் வேண்டும் என்றும் கேட்டார் ஜெயலலிதா வழக்கறிஞர் குமார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், மீண்டும் மீண்டும காலஅவகாசம தரக் கூடாது என்று வாதிட்டார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேரும் ஒரு நாள் கூட ஆஜராகவில்லை என்றும் குற்றம்சாற்றப்பட்டவர்கள் நேரில் ஆஜராக உத்தரவு இட வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர் வலியுறுத்தினார்.
இதையடுத்து, குற்றம்சாற்றப்பட்டவர்கள் ஆஜராவது தொடர்பாக வரும் 8ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று கூறி வழக்கை நீதிபதி தள்ளிவைத்தார்.