சித்ரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்து உலக நாளாகிய ஜூன் 26 ஆம் தேதி 'மே 17 இயக்கம்' அழைப்பு விடுத்துள்ள மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தமிழ் இன உணர்வாளர்கள் பங்குபெற வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதகுல வரலாற்றில் மிகவும் கொடூரமாக நடத்தப்பட்ட மனிதப் பேரழிவுதான் சிங்கள அரசு இலங்கைத் தீவில் நடத்திய தமிழ் இனப் படுகொலை. கடந்த ஐம்பது ஆண்டுக்கால துன்பங்கள் சூழ்ந்த தமிழ் ஈழ மக்களின் வாழ்வில், லட்சக்கணக்கான தமிழர்கள், குறிப்பாக, 2009 ஆம் ஆண்டில் மட்டும், 30,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட 1,40,000 தமிழர்கள், படுகொலைக்கு உள்ளானார்கள். 80,000 க்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டு உள்ளனர்.
அது மட்டும் அன்றி, தாய்த் தமிழகத்து மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தொடர்ந்து நடத்தி வந்த தாக்குதல்களில், 543 மீனவர்கள் கொல்லப்பட்டனர்; 2000 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர்; 700 மீனவர்களைக் காணவில்லை.
சிங்கள அரசின் இனப்படுகொலையால் பலியான தமிழர்கள், உயிர்நீத்த தாய்த் தமிழகத்து மீனவர்களுக்கு நினைவேந்தல் செய்திடும் வகையில், சித்ரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்து உலக நாளாகிய ஜூன் 26 ஆம் நாள் மாலை 5 மணி அளவில், சென்னை கடற்கரையில் கண்ணகி சிலை அருகில் மெழுகுவர்த்திகள் ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்ச்சியில் பங்கு ஏற்க, ‘மே 17 இயக்கம்’ அழைப்பு விடுத்து உள்ளது.
அந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க சார்பில் துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யாயாவும் தொண்டர்களும் கலந்து கொள்ள உள்ளனர். சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், தமிழ் இன உணர்வாளர்கள் பங்கு ஏற்க வேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.