முறைகேடு செய்ததாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரி ஒருவர் ஆவின் தலைமை அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போரூர் அடுத்த காரப்பாக்கத்தை சேர்ந்த ராஜன் (55) என்பவர் அம்பத்தூர் பால் பண்ணையில் முதுநிலை விற்பனை மேலாளராக மானேஜராக பணியாற்றி வந்தார்.
கடந்த 13 மாதங்களுக்கு முன்பு முறைகேடு செய்ததாகச் கூறி ராஜனை ஆவின் நிர்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தது. இதனால் ராஜனின் குடும்பம் கஷ்டத்தில் ஈடுபட்டு வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அசோக் நகர் உதயம் தியேட்டர் அருகே உள்ள ஆவின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற ராஜன், அங்கு உயர் அதிகாரி ஒருவரை சந்தித்து, “வேலை இல்லாததால் தனது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும், பிள்ளைகளை படிக்க வைக்க கஷ்டப்படுவதாகவும், தன் மீதான பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யுமாறு கேட்டுள்ளார்.
ஆனால் இதை ஏற்க உயர் அதிகாரி மறுத்து விட்டதால் மனம் உடைந்த ராஜன் அந்த அலுவலகத்திலேயே தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ராஜன் உயிர் வழியிலேயே பிரிந்தது.
தீக்குளித்து பலியான ராஜனுக்கு கற்பகம் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஆவின் தலைமை அலுவலகத்தில் அதிகாரி தீக்குளித்த நிகழ்வு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.