புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று திடீரென டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
என்.ஆர். காங்கிரஸ் 15 தொகுதிகளையும், அ.இ.அ.தி.மு.க. 5 தொகுதிகளையும் கைப்பற்றியது. சுயேச்சை உறுப்பினர் ஆதரவுடன் ஆட்சி அமைத்த ரங்கசாமி, அ.இ.அ.தி.மு.க.வுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை.
இதனால் தமிழக முதலமைச்சரும், அஇஅதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா, ரங்கசாமி மீது குற்றம்சாற்றினார்.
இந்த நிலையில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த ரங்கசாமி ஒரு தொகுதியை ராஜினாமா செய்ததால் என்.ஆர். காங்கிரசின் பலம் 14 ஆக குறைந்தது.
சட்டப்பேரவையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகியவை தற்போது சமபலத்தில் உள்ளது. இதில் ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரசுக்கு கூடுதலாக சுயேச்சை உறுப்பினரின் ஆதரவு மட்டும் உள்ளது.
இதுவரை புதுச்சேரி சட்டப்பேரவையில் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிட்டால் ஆட்சிக்கே ஆபத்தாக முடியும் என்பதால் ரங்கசாமி, காங்கிரசின் ஆதரவை பெற முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் ரங்கசாமி இன்று காலை திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு சோனியா காந்தியை சந்தித்து காங்கிரசின் ஆதரவை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.