காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் டெண்டர் விடுவதில் தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க.வினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தி.மு.க ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
திருக்கழுக்குன்றம், கருங்குழி பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன் (45). அ.இ.அ.தி.மு.க நகரச் செயலராக இருக்கும் இவர் திருக்கழுக்குன்றம் பி.டி.ஓ. அலுவலகத்தில் டெண்டர் விடும்போது சென்றுள்ளார்.
அப்போது அவருக்கும் தி.மு.க ஒன்றியக் குழுத் தலைவர் சம்பூரணம், துணைத் தலைவர் சரவணன் ஆகியோருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சம்பூரணம், சரவணன் இருவரும் தன்னை பற்றியும் அ.இ.அ.தி.மு.க.வை பற்றியும் அவதூறு சுவரொட்டிகள் ஒட்டியதாக திருக்கழுக்குன்றம் காவல்துறையில் முரளிதரன் புகார் செய்தார்.
இதனைத் தொடர்ந்து ஒன்றியக் குழுத் தலைவர் சம்பூரணம், துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.