சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் 4 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சகஜநிலைக்கு திரும்பியது. சாதாரண உணவை சாப்பிடுவதோடு மருத்துவமனை வளாகத்தில் ரஜினிகாந்த் நடைபயிற்சி செய்தார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்னும் 4 நாட்களில் சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். என்றாலும், அவர் சிங்கப்பூரிலேயே சில வாரங்கள் தங்கியிருந்து, உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்று வரவேண்டியதிருக்கும்.
இதற்காக சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்திருக்கிறார்கள். மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் ரஜினியுடன் தங்கியிருப்பார்கள்.
இதனிடையே ரஜினிகாந்த் செல்போன் மூலம் சென்னையில் உள்ள இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருடன் நேற்று பேசியுள்ளார். அப்போது, மிக விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் தகவலை தெரிவித்துள்ளார்.
'ராணா' படவேலைகள் எந்த நிலையில் உள்ளன என்பது பற்றியும் ரவிகுமாரிடம் ரஜினிகாந்த் விசாரித்துள்ளார்.
உடல்நிலையை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள் என்றும் உடல்நிலை முழுமையாக தேறியபின் 'ராணா' படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம் என்றும் ரஜினியிடம் கூறியதாக கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார்.