மெட்ரோ இரயில் இதிட்டத்தைக் கைவிடவில்லை, அப்படியே இருக்கிறது என்று மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பா.ம.க உறுப்பினர் கணேஷ் குமார் பேசுகையில், சென்னையில் மெட்ரோ இரயில் திட்டத்தை விரிவுபடுத்தி இருக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள மோனோ இரயில் திட்டம் என்பது பல நாடுகளில் தோல்வி அடைந்துள்ளது.
ஜப்பானில் 108 கிலோ மீட்டர், ஆஸ்ட்ரேலியாவில் 7 கிலோ மீட்டர் என உலக நாடுகளில் மொத்தம் 164 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே மோனோ இரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகளில் 30 கிலோ மீட்டருக்கு அதிகமாக அந்தத் திட்டம் அமல்படுத்தப்படவில்லை. எனவே மோனோ இரயில் திட்டம் சரியானது தானா என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சென்னையில் மெட்ரோ இரயில் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டதைப் போலவும், அதற்குப் பதிலாக மோனோ இரயில் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும் பேசுகிறார்கள். மெட்ரோ ரயில் இதிட்டத்தைக் கைவிடவில்லை. அப்படியே இருக்கிறது.
சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க குறைந்த காலத்தில் செயல்படுத்தும் திட்டமாக மோனோ இரயில் திட்டம் உள்ளது. மெட்ரோ இரயில் திட்டத்தைச் செயல்படுத்த அதிக ஆண்டுகள் ஆகும். மோனோ இரயில் திட்டம் தோல்வி அடைந்துள்ளதாகக் கூறுவது தவறான கருத்து. ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளில் அந்தத் திட்டம் அமலில் உள்ளது.
மோனோ இரயில் திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் செயல்படுத்தி முடிக்க வாய்ப்பு இருக்கிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மோனோ இரயில் கொண்டு வரப்படுகிறது என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.