ஈரோட்டிலிருந்து அயல்நாட்டுக்கு மஞ்சள் முதன்முறையாக ஏற்றுமதி
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
ஈரோடு , செவ்வாய், 7 ஜூன் 2011 (10:21 IST)
ஈரோடு மாவட்டத்தில் இருந்து கம்போடியா நாட்டிற்கு தற்போது 100 டன் விதைமஞ்சள் முதன்முறையாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
webdunia photo
WD
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதியில் இந்த ஆண்டு அதிகமாக மஞ்சள் பயிரிட்டிருந்தனர். பிற பகுதிகளில் அறுவடையான மஞ்சளை காட்டிலும் இப்பகுதியில் அறுவடையான மஞ்சள் தரம் நன்றாக இருந்த காரணத்தால் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் விவசாயிகள் இப்பகுதிக்கு வந்து விதை மஞ்சள் கொள்முதல் செய்தனர்.
இதன் காரணமாக இப்பகுதி மஞ்சள் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த மஞ்சளின் பெரும்பங்கு விதைமஞ்சளாக விற்பனை செய்துவிட்டது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் இப்பகுதி மஞ்சளின் மகிமை உள்நாடு, அண்டை மாநிலம் மட்டுமின்றி அயல்நாட்டிற்கும் சென்றடைந்துள்ளது. ஆம் தற்போது இப்பகுதியில் இருந்து 100 விதை மஞ்சள் கம்போடியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
webdunia photo
WD
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் வரதராஜன். இவர் தற்போது சிங்கபூரில் கம்ப்யூட்டர் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு கோவை வேளாண்மை பல்கலைகழக பேராசிரியர் மாதவன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவர் மூலம் மஞ்சளில் இருந்து குர்மின் என்ற கிரிமிநாசினி மருந்தை கண்டுபிடிக்க திட்டமிட்டோம். இதற்காக மஞ்சள் அதிகம் பயிரிட முடிவு செய்தேன்.
இதற்காக கம்போடிய நாட்டை தேர்வு செய்தேன். இங்கு விளைநிலங்களில் விலை மிகவும் குறைவாக உள்ளதால் அந்நாட்டின் உதவியுடன் தற்போது 1000 ஏக்கர் விலைக்கு வாங்கியுள்ளேன்.
இங்கு நீர்வளம், நில வளங்கள் நன்றாக உள்ளது. ஆட்கள் பற்றாக்குறை என்பதும் இல்லை. கம்போடியாவில் தற்போது 86 சதவீதம் நெற்பயிர் மட்டுமே பயிரிட்டுள்ளனர். இந்த மண் மஞ்சள் பயிரிட உகந்ததா என பரிசோதனை செய்துவிட்டேன். மஞ்சள் பயிரிட உகந்த மண் என்று தெரிந்தவுடன் தமிழ்நாட்டில் இருந்து குறிப்பாக சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதியில் இருந்து மஞ்சள் வாங்கி செல்ல முடிவு செய்தேன்.
இதற்காக என் நண்பர் மூலம் சத்தியமங்கலத்தை அருகே உள்ள செண்பகபுதூரை சேர்ந்த ராமமூர்த்தி, கணேச மூர்த்தி ஆகிய இருவரிடம் தொடர்புகொண்டேன். இவர்கள் வைத்துள்ள பி.எஸ்.ஆர்., 2 என்ற வகை மஞ்சள் ( பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது) தரமானது என தெரிந்து இந்த மஞ்சள் 100 டன் வேண்டும் என்று கூறியவுடன் இவர்கள் இருவரும் பல்வேறு விவசாயிகளை அணுகி எனக்கு மொத்தம் 100 டன் விதை மஞ்சள் சேகரித்து கொடுத்தனர்.
அடுத்த வருடம் இதை 500 டன்னாக உயர்த்த திட்டமிட்டுள்ளேன். முதல்கட்டமாக கம்போடியாவில் 100 ஏக்கரில் மட்டுமே மஞ்சள் பயரிட திட்டமிட்டுள்ளேன். இங்கு கொள்முதல் செய்யப்பட்ட விதை மஞ்சள் குளிர்சாதன வசதி கொண்ட கண்டைனரில் ஏற்றி கப்பல் மூலம் சிங்கப்பூர் சென்று அங்கிருந்து கம்போடியா நாட்டிற்கு 20 நாட்களில் சென்றடையும் என்றார்.
சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதியில் இருந்து மஞ்சள் அதுவும் பவானிசாகரில் கண்டுபிடிக்கப்பட்ட மஞ்சள் வெளிநாடு செல்வது இப்பகுதி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விவசாயி ராமமூர்த்தி கூறுகையில், நம் பகுதி விவசாயிகளின் புகழ் கம்போடியா நாடுவரை செல்லுவதால் சிரமம் பார்க்காமல் அவர்களுக்கு தேவையான 100 மஞ்சளை சேகரித்து கொடுத்தேன். அடுத்த வருடம் முன்கூட்டியே திட்டமிட்டு அவர்களுக்கு தேவையான மஞ்சளை உற்பத்தி செய்துகொடுக்க முடிவுசெய்துள்ளதாக கூறினார்.