தமிழக உள்துறை முதன்மைச் செயலராக இருந்த கே.ஞானதேசிகன் மாற்றப்பட்டு புதிய உள்துறை செயலராக ஷீலா ராணி சுங்கத் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக (டிக்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்த ஷீலா ராணி சுங்கத் இடமாற்றம் செய்யப்பட்டு, உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால்துறை முதன்மை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச்செயலாளர் கே.அசோக் வரதன் ஷெட்டி மாற்றப்பட்டு, ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி சிறப்பு ஆணையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
உள்துறை முதன்மைச்செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் ஷீலாராணி சுங்கத், கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1978ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், சுகாதாரத்துறை செயலாளர், உள்துறை செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜப்பான், பிரெஞ்சு ஆகிய 5 மொழிகளில் அற்புதமான ஆற்றல் பெற்றவர். மிகவும் கண்டிப்பும் நேர்மையும் கொண்ட அதிகாரி என்று பெயர் எடுத்தவர்.
ஷீலாராணி சுங்கத்தின் கணவர் மோகன் வர்க்கீஸ் சுங்கத், தமிழக அரசில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.