முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதியின் தன்மையை டெல்லியில் இருந்து வந்துள்ள தொழில்நுட்ப குழு இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் அமைத்த நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஜவர் குழு கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையை நேரில் ஆய்வு செய்தது.
அப்போது அணையில் தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதியை நீர்மூழ்கி வீரர்கள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஆய்வு நடத்த டெல்லியில் உள்ள மத்திய மண் ஆராய்ச்சி மைய இணை இயக்குனர் ராஜ்பால் சிங் தலைமையில் தொழில்நுட்ப பொறியாளர்கள், நீர்மூழ்கி வீரர்கள் அடங்கிய 12 பேர் கொண்ட குழுவினர் நேற்று கம்பம் வந்தனர்.
அதிநவீன தானியங்கி கேமிரா மூலம் முல்லைப் பெரியாறு அணையின் ஒவ்வொரு 30 அடி உயரத்தையும் நீச்சல் வீரர்கள் துல்லியமாக இன்று படம் பிடிக்கிறார்கள். இப்பணி நாளையும் நீடிக்க வாய்ப்புள்ளது. அதன் பின்னர் ஆய்வு அறிக்கை நீதிபதி ஆனந்த் குழுவிடம் அளிக்கப்படுகிறது.