கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடையில் அதிகளவு நீர் திறந்துவிடப்பட்டதால் காட்டுமன்னார்கோவில் அருகே 25 கிராமங்களை நீர் சூழ்ந்தது. 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் பெய்து வரும் மழை நீர் சுமார் 6 ஆயிரம் கன அடி அளவுக்கு செங்கால்ஓடை, கருவாட்டுஓடை, பாபாக்குடி ஓடை உள்ளிட்ட காட்டாறுகள் மூலம் வீராணம் ஏரிக்கு வருகிறது.
அதிகளவு நீர் வருவதால் வீராணம் ஏரியிலிருந்து சனிக்கிழமை அதிகாலை வெள்ளியங்கால் ஓடையில் 5 ஆயிரம் கனஅடி நீரும், சேத்தியாத்தோப்பு விஎன்எஸ் அணைக்கட்டுக்கு ஆயிரம் கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.
சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 74 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரியில் 45.5 அடி நீர் தேக்கிவைக்கப்பட்டு உபரியாக வரும் மழைநீர் 6 ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் காட்டுமன்னார்கோவில் பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இவையல்லாமல் காட்டாறுகள் மூலம் வரும் மழைநீர் மணவாய்க்கால் மற்றும் வெள்ளியங்கால்ஓடையில் சுமார் 12 ஆயிரம் கனஅடி அளவுக்கு கலக்கிறது