Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடிதங்களை வைத்துக் கொண்டு நாக்கையா வழிப்பது? - கருணாநிதிக்கு ஜெயலலிதா காட்டம்

Advertiesment
கடிதங்களை வைத்துக் கொண்டு நாக்கையா வழிப்பது? - கருணாநிதிக்கு ஜெயலலிதா காட்டம்
, செவ்வாய், 2 நவம்பர் 2010 (13:27 IST)
கடந்த நான்கரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் காவிரி நதிநீரைப்பெற கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார்? கடிதங்கள் எழுதியதற்கான புள்ளிவிவரங்களை தருகிறார். அதை வைத்துக் கொண்டு நாக்கையா வழிப்பது என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

காவிரி நதிநீர்ப் பிரச்ச்னை தொடர்பாக ஜெயலலிதா எழுப்பிய கேள்விகளுக்கு கருணாநிதி பதிலளிக்க தற்போது ஜெயலலிதா மீண்டும் பதிலறிக்கை விடுத்துள்ளார். அதில்:

காவிரி நதிநீர் ஆணையத்தை நான் பல் இல்லாத ஆணையம் என்று 2002 ஆம் ஆண்டு கூறியதாகவும், தற்போது இதன் மீது மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளவரைப் போல பேசுவதாகவும் கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.

2002ஆம் ஆண்டு அல்ல, 1998ஆம் ஆண்டு இந்த காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப் பெற்றதிலிருந்தே இது அதிகாரமற்ற ஆணையம் என்று தான் நான் குறிப்பிட்டு வருகிறேன். 1998ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை ஒரே நிலையைத் தான் நான் கடைபிடித்து வருகிறேன்.

தமிழகத்தின் உரிமையை பெறும் வகையில் அதிகாரிகளைக் கொண்ட அதிகாரமுள்ள காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு. காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு 1970 ஆம் ஆண்டு முதன் முதலாக கடிதம் எழுதியதாக கூறி இருக்கிறார் கருணாநிதி.

இதே கருணாநிதி தான், கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை” என்று 6.3.1970 அன்று பேரவையில் பேசி இருக்கிறார் என்பது வரலாறு. இது கருணாநிதியின் முதல் துரோகம். இதனைத் தொடர்ந்து, காவேரி நதியின் உபநதிகளாகிய கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி ஆகியவற்றில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலும், மத்திய திட்டக் குழுவின் ஒப்புதல் இல்லாமலும், தன்னிச்சையாக கர்நாடகம் துவக்கியது. கர்நாடக அரசின் இந்த அத்துமீறல்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தவர் தான் கருணாநிதி. இது கருணாநிதியின் இரண்டாவது துரோகம்.

காவிரிப் பிரச்சினை குறித்து பேரவையில் 8.7.1971 அன்று தீர்மானம் நிறைவேற்றியதாக கூறி இருக்கிறார் கருணாநிதி. ஆனால் இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், 4.8.1971 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 131 ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பேரவை மற்றும் மேலவைக்கு தெரிவிக்காமலேயே தெரிவிக்காமலேயே தனக்குள்ள அரசியல் நெருக்கடி காரணமாக திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டார் கருணாநிதி! இது கருணாநிதியின் மூன்றாவது துரோகம்.

18.2.1892 ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரசிடென்சி மற்றும் மைசூர் சமஸ்தானம் ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தான் காவேரி தொடர்பான முதல் ஒப்பந்தம் ஆகும். 1924 ஆம் ஆண்டு இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த இரண்டாவது ஒப்பந்தம் 50 ஆண்டு காலம் நடைமுறையில் இருக்கும் என்றும், மறு ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்படுத்திக் கொள்வது என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியவர் கருணாநிதி! இது கருணாநிதியின் நான்காவது துரோகம்.

அடுத்தபடியாக, நான் முதல்வராக இருந்த போது நடுவர் மன்றத் தீர்ப்பினை நிறைவேற்ற முயற்சி எடுக்கவில்லை என்று கருணாநிதி என் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நிராகரிக்கும் வகையில் கர்நாடக அரசு அவசரச் சட்டம் இயற்றிய போது, அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதன் விளைவாக நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு 10.12.1991 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது எனது ஆட்சிக் காலத்தில் தான். காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று மத்திய அரசும், கர்நாடக அரசும் வலியுறுத்தப்பட்டது எனது ஆட்சிக் காலத்தில் தான்.

இது தவிர, அதிகாரமுள்ள காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கையை பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு புறக்கணித்த போது, அந்த அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அதிமுக விலக்கிக் கொண்டது.

காவிரிப் பிரச்சினைக்காக, எனது ஆட்சிக் காலத்தில் 2002 ஆம் ஆண்டு அனைத்துக் கட்சித் தலைவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவையும் அழைத்துக் கொண்டு போய் பிரதமரைச் சந்தித்தோம்.

கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் காவிரி நதிநீரைப் பெற கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார்? ஏதாவது கேட்டால் கடிதங்கள் எழுதியதற்கான புள்ளி விவரங்களை தருகிறார். இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்காக மத்திய அரசை வலியுறுத்தவோ அல்லது கர்நாடக அரசை வலியுறுத்தவோ கருணாநிதிக்கு துணிச்சல் இருக்கிறதா?

இனிமேல், இது போன்ற அறிக்கைகள் எழுதுவதில் நேரத்தை செலவிடாமல் காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக மக்களின் சார்பில் கருணாநிதியை வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil