''பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்'' என்று ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய வணிகத்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் வெளிநாட்டு வர்த்தகத் துறையின் இயக்குநர் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதி செய்ய இருந்துவந்த கட்டுப்பாட்டை நீக்கி எந்த அளவு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதிக்கு 2010-11 ஆம் ஆண்டுக்கு 55 இலட்சம் பேல் என்று வரையறுக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட அந்த அளவும் 15.11.2010 அன்று மறு ஆய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய கொள்கை முடிவு ஆடை உற்பத்தியாளர்களுக்கும், விவசாயப் பெருங்குடிமக்களுக்கும் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. உள்நாட்டு ஆடைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் விவசாயிகள் முழுப் பலன் அடைகின்ற வகையில் மத்திய அரசின் கொள்கை முடிவை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதிக் கொள்கை தளர்த்தப்பட்ட உடனே நூலின் விலை இந்தியச் சந்தையில் ஒரு கேண்டியின் விலை ரூ. 33,000/- என்ற நிலையைத் தொட்டுள்ளது. விண்ணைத் தொட்டிருக்கும் இந்த விலை உயர்வு, ஆடை உற்பத்தியாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விலை உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் ஏற்றுமதியாளர்கள் பெரிய சோதனையையும், வேதனையையும் சந்திக்க நேரிடும். விவசாயிகளுக்கு இதனுடைய முழுப் பயனும் கிட்டுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களும், ஆடை உற்பத்தியில் நம்முடன் போட்டியிடும் நாடுகளும் தரம் வாய்ந்த நூல்களைப் பெற்று அதிக ஆதாயம் பெற வழிவகுக்கும். நமது ஏற்றுமதியாளர்கள் ஆடை உற்பத்தியில் பொருளாதார ரீதியில் மிகப் பெரிய போட்டியைச் சந்திக்க நேரிடுவதுடன், நமது உற்பத்தியாளர்களுக்குத் தரமான நூல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
மேலும், இன்றைய சூழலில் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரும் விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவில் ஈடுபடுவோரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். எனவே, உள்நாட்டுத் தொழில் பாதிப்புக்கு உள்ளாகாத வகையில் நூல் ஏற்றுமதி மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.
நமது விவசாய உற்பத்தியைக் கணக்கிட்ட பிறகு - உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்த பிறகு - ஏற்றுமதிக்கான அளவை நிர்ணயம் செய்ய வேண்டும். நூல் வணிகம் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின்கீழ் கொண்டு வந்தால்தான் நூல் ஏற்றுமதி முறைப்படுத்தப்படும்.
கள்ளச் சந்தை மற்றும் பதுக்கல்காரர்களிடமிருந்து ஆடைத் தொழில் காப்பாற்றப்பட வேண்டும். விசைத்தறி நெசவு மற்றும் கைத்தறி நெசவில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், குறிப்பாக கிராமப்புறத்திலிருந்து வந்து பின்னலாடை மற்றும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் தங்கள் வேலையை இழக்கக் கூடிய ஆபத்தான சூழல் உருவாகியுள்ள நிலையில் மத்திய அரசு தலையிட்டு ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.