‘‘தமிழக சட்டப்பேரவைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்’’ என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.இ.அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இளம் பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா, இந்த கூட்டத்தின் மூலம் சில ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் எடுத்துச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
ஒவ்வொரு ஒன்றியத்திலும், நகரத்திலும் செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நடத்த வேண்டும். அதில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதை மாவட்ட செயலர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு ஒன்றிய நகர, பேரூர், அளவிலும் பொதுக் கூட்டங்கள் நடத்துங்கள். அந்த கூட்டத்திற்கு நகர செயலர், பேரூர் செயலர், ஒன்றிய செயலர், மாவட்ட செயலரை அழைக்க வேண்டும். பொதுக் கூட்டத்தில் தி.மு.க.வினரின் செயல்பாடுகளை விமர்சியுங்கள்.
சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம், வாக்குச் சாவடிகளில் நீங்கள் தான் பணியாற்ற வேண்டும். விழிப்புடன் இருந்து வாக்குச் சாவடிகளை கண்காணிக்க வேண்டும். எவ்வாறு செயல் பட வேண்டும் என்று பாசறை செயலர்கள் வழி காட்ட வேண்டும் என்று ஜெயலலிதா தெரிவித்தார்.
கூட்டத்தில், காலாவதி, போலி மருந்து விற்பனையில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.