''சிறுபிராயம் முதல் எப்போதும் ஜோதிடத்தை நம்பியதில்லை'' என்று முதலமைச்சர் கருணாநிதி ஜெயலலிதாவுக்கு பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில், 'கோபாலபுரம் வீட்டில் தங்கினால் உயிருக்கு ஆபத்து என்று யாரோ ஜோதிடர் கூறியதால்தான் அந்த வீட்டை அறக்கட்டளைக்கு ஒப்படைத்து விட்டேன் என்று ஒரு திருமண விழாவில் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
அந்த ஜோதிடர் யார் என்பதை நிரூபிக்கத் தயாரா? எனது பிறந்த நாளுக்குப் பிறகு நான் இப்போதுள்ள வீட்டின் பத்திரத்தைத் தான் ஒப்படைக்க இருக்கிறேன். என் மறைவுக்குப் பிறகே அந்த வீட்டை மருத்துவமனைக்காக ஒப்படைக்க இருக்கிறேன். இது எதுவும் தெரியாமல் யாரோ ஜோதிடர் சொன்னதைக் கேட்டுக் கொண்டு மணவிழாவில் அவர் புலம்பியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, ஜோதிடரின் பேச்சைக் கேட்டுதான் தலைமைச் செயலகத்தை சீக்கிரமாக திறந்து வைத்ததாகவும், மார்ச் மாதத்துக்குப் பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்தால் திரும்ப ஆட்சிக்கு வர முடியாது என்று ஜோதிடர் சொன்னதால்தான் தலைமைச் செயலகத்தை மாற்றியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
மார்ச் மாதம் முடிந்து இப்போது மே மாதம் நடக்கிறது. புதிய தலைமைச் செயலகத்தின் பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிவடைய உள்ளன. அதுவரை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்தான் உட்கார்ந்திருக்கப் போகிறேன். இப்போது ஜெயலலிதாவின் பொய் என்னவாகப் போகிறது?
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதாகச் சொல்லி பூஜைகள் செய்து அடிக்கல் நாட்டியதாக செய்திகள் வந்தன. அந்த ஜோதிடம் பலித்ததா? அண்ணா முதல்வராக இருந்தபோது கடற்கரையில் வைக்கப்பட்ட கண்ணகி சிலையை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அகற்றினார்கள்.
ஜோதிடர் சொன்னதால்தான் அது அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியாயின. அந்த ஜோதிடர் சொன்னது பலித்து அவரது ஆட்சி நீடித்ததா? அந்த கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவி, தினமும் அதை பார்த்துக் கொண்டுதானே தலைமைச் செயலகம் செல்கிறேன். அதனால் எனது ஆட்சிக்குதான் இடைஞ்சல் வந்து விட்டதா?
ராகு கேது பூஜை செய்ய திங்கள்கிழமை காளஹஸ்திக்கு ஜெயலலிதா சென்றதாக செய்திகள் வந்துள்ளன. இந்த ஜோதிடம், யாகம், பூஜைகள் எல்லாம் அவருக்குதான் கைவந்த கலையே தவிர எனக்கு இல்லை. இளம்பிராயம் முதல் இதில் எதையும் நம்பாத என்னைப் பற்றி திருமண விழாவில் வசைபாடியிருக்கிறார். சிறுதாவூர் பற்றி புகார் கொடுத்தவர்கள் மீது வராத கோபம் என் மீது வரலாமா?' என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.