10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ- மாணவிகளுக்கு பரிசுத்தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் தமிழரசி இதனை தெரிவித்தார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், 2வது பரிசு ரூ.20 ஆயிரமும், 3வது பரிசு ரூ.15 ஆயிரமும் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் பரிசு ரூ.50 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.30 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.20 ஆயிரம் எனவும் 2010-11ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் என்றார்.
மருத்துவம் படிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ- மாணவிகளுக்கு 100 சதவீத மானியத்துடன் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தமிழரசி கூறினார்.
தற்போது மருத்துவ மாணவ- மாணவியர்களுக்கு உயர்கல்வி உதவித் தொகையானது ரூ.7,000 வழங்கப்படுகிறது என்றும் அதில் 75 சதவீதம் மானியமாகவும், 25 சதவீதம் கடனாகவும் வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் தமிழரசி தெரிவித்தார்.