தனக்கு எதிராக தமிழக அரசு தொடுத்த சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்குமாறு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
தன் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக 1996-97ஆம் ஆண்டில் வழக்கு தொடர்ந்த தமிழக அரசு, அது தொடர்பாக நடத்திய புலனாய்வு சட்டத்திற்குப் புறம்பானது என்றும், எனவே இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தனது மனுவில் கோரியிருந்தார்.
இதனை ஏற்க மறுத்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.எம். மல்லி்க்கார்ஜூனையா, மனுவை நிராகரிப்பதாக அறிவித்தார். சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான விசாரணை மே 3ஆம் தேதி விசாரிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதே காரணத்தைக் கூறி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தனது வழக்கை விசாரிக்க தடை விதிக்குமாறு ஜெயலலிதா தொடர்ந்த மனுவை கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.