மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் உ.ரா.வரதராஜன் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று மக்கள் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதை தொடர்ந்து அந்த அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அடித்து நொறுக்கினர். இந்த நிகழ்வில் அலுவலக ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் உ.ரா.வரதராஜன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது மரணம் குறித்து நேற்று மக்கள் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
அதில், ''வரதராஜன் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் இந்த தகவல் உறுதியாகி உள்ளது'' என்றும் செய்தி வெளியானது.
அவர் கடத்தி செல்லப்பட்டு, கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டு, பின்னர் ஏரியில் பிணம் வீசப்பட்டு இருக்கலாம் என்றும் அந்த தொலைக்காட்சி செய்தியில் சந்தேகம் எழுப்பப்பட்டது.
ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ள காவல்துறை, வரதராஜனின் வயிற்றுக்குள் தண்ணீர் இருந்தது பிரேத பரிசோதனையின் ஆரம்ப கட்ட விசாரணையில் உறுதிபட தெரிய வந்துள்ளது என்றும், கொலை செய்யப்பட்டு தண்ணீரில் வீசப்பட்டால், வயிற்றுக்குள் ஏரி தண்ணீர் போக வாய்ப்பு இல்லை என்றும், மேலும் பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை இன்னும் வரவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். இறுதி அறிக்கை வந்த பிறகுதான், இது பற்றி சொல்ல முடியும் என்றும் காவல்துறையினர் கூறினர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 300க்கும் மேற்பட்டோர் இன்று மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தில் புகுந்து கடும் தாக்குதல் நடத்தினர்.
இதில் கண்ணாடிகள், ஒளிபரப்பு சாதனங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அடித்து நொறுக்கினர். அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதலில் அலுவலக ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 300 பேரை கைது செய்தனர்.