''முல்லைப் பெரியாறு அணை அருகே கேரள அரசு நடத்தி வரும் ஆய்வுப்பணிக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்'' பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள அரசு முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மறுபடியும் நீதிக்கு மாறாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் நடக்க ஆரம்பித்துள்ளது. புதிய அணைக்கு ஆயத்தமாக நேற்று மண் பரிசோதனை, பாறை பரிசோதனை மற்றும் ஆய்வு பணிகளை மிகப்பெரிய எந்திரங்களை கொண்டு, துளையிடும் பணியை தொடங்கியுள்ளது.
இப்பணிக்காக, அப்பகுதியில் ஏராளமான மரங்களும் வெட்டப்பட்டிருக்கின்றன. இது கேரளத்தின் சுற்றுச்சூழலை மட்டும் அல்லாமல் தமிழகத்தின் சுற்றுச்சூழலையும் பாதிக்கும். இப்பணி ஒரு வாரம் நடைபெறும் என்றும் கேள்விப்படுகிறோம்.
ஆளும் அரசுகள் இந்த ஆய்வுப்பணிக்கு உடனே எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனவும், முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக தலையிட்டு கேரள அரசின் அணைகட்டும் இப்பணியை தடுத்து நிறுத்திட வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.