தமிழகத்தில் ஜாதி வேற்றுமை ஒழிய வேண்டும் என்றும் தமிழ் சமுதாயம் என்ற நிலை வர வேண்டும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவியின் தங்கை மகன் கார்த்திகேயன்-ரேவதி திருமணத்தை முதலமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்து பேசுகையில், இங்கு நடைபெறுவது காதல் கலப்பு திருமணம் என்று கூறினார்கள். கலப்பு திருமணத்தை வாழ்த்தி பலர் பேசினார்கள். ஆனால் உண்மையாகவே எத்தனை பேர் அதை ஆதரிக்கிறார்கள் என்பதை நெஞ்சை தொட்டு பார்க்க வேண்டும்.
கலப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும் என்று பெரியார், அண்ணா ஆகியோர் வழி காட்டினார்கள். சமத்துவம் தேவை என்பதால் தான் காதல் கலப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும் என்கிறோம். உண்மையான சமத்துவம் வளரவேண்டும் என்றால் காதல், கலப்பு திருமணங்கள் நடைபெற வேண்டும். அதற்கு ஊக்கமும் உறுதியும் நண்பர்கள் தோழர்கள் உடன் பிறப்புகள் பெற வேண்டும். சமத்துவபுரங்கள் ஏழை எளியோர்களுக்காக மட்டும் அளிக்கப்படுவது அல்ல. சமத்துவபுரத்தில் காதல் கலப்பு திருமணங்கள் நடைபெற வேண்டும் அதன் மூலம் சமத்துவம் வளர வேண்டும்.
ஒரு சமத்துவபுரத்தில் 100 வீடுகள் இருக்கிறது என்றால் 60 வீடுகள் தாழ்த்தப்பட்டோருக்கும், மற்ற வீடுகள் பிற்பட்டோருக்கும் இதில் 10 சதவீதம் உயர் ஜாதியினருக்கும் வழங்கப்படுகிறது. இங்கு குடியிருப்பவர்கள் மூலம் காதல் கலப்பு திருமணங்கள் நடந்து சமத்துவம் வளர வேண்டும். எதிர்காலத்தில் தமிழ் சமுதாயம் என்ற ஒரே இனம் என்ற எண்ணம் உருவாக வேண்டும்.
ஜாதி ஒழிய வேண்டும் என்ற ஒரே நோக்கத் தோடுதான் 100, 200, 300 என சமத்துவபுரங்கள் அமைக்கப்படுகின்றன. என்றாலும் ஜாதி ஒழிய வேண்டும் என்பது வெறும் வார்த்தை ஜாலமாக உள்ளது. அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இங்கு இத்தனை பேர் தமிழர்கள் இருக்கிறார்கள் என்றால் நாம் எல்லோரும் கையை உயர்த்துவோம். ஆனால் கூட்டம் முடிந்து, விழா முடிந்து வெளியே செல்லும் போது 10 பேர், 20 பேர் என்று அந்தந்த ஜாதி வாரியாக ஒன்றாக வெளியே செல்வார்கள். இந்த ஜாதி வேற்றுமை ஒழிய வேண்டும். தமிழ் சமுதாயம் என்ற நிலை வர வேண்டும். பெரியார், அண்ணா ஆகியோர் ஜாதி மறுப்பு என்ற கோஷத்தை சுயமரியாதை இயக்கங்கள் மூலம் சற்று கடுமையாகவே கூறினார்கள்.
அதன் தொடர்ச்சியாக இன்று ஏராளமான கலப்பு திருமணங்கள், சுய மரியாதை திருமணங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. இது நமது இயக்கத்தின் மூலம் இந்த சமுதாயத்துக்கு கிடைத்த மாபெறும் வெற்றி அந்த வகையில் திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கும் மணமக்களை எல்லா வளமும் பெற்று வளர வாழ்த்துகிறேன் என்று கருணாநிதி பேசினார்.