வாக்காளர்களுக்கு பணம் தரும் நிகழ்வை காங்கிரஸ் கட்சி எப்போதும் வரவேற்காது என்றும், தங்களுக்கு ஜனநாயகத்தின் மீது மட்டுமே நம்பிக்கை உள்ளது, பணநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம், நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களிடம் ஒட்டுக்காக பணம் கொடுத்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது பற்றி கேட்டதற்கு, வாக்காளர்களுக்கு பணம் தரும் நிகழ்வை காங்கிரஸ் கட்சி எப்போதும் ஆதரிக்காது. அதனை வரவேற்பதும் கிடையாது.
நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், பணநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். சோனியா காந்தியின் வழிகாட்டுதலின் பேரில் மக்கள் பணியாற்றும் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குகளை கேட்டு வருகிறோம் என்றார் தங்கபாலு.
தமிழகத்தில் ஆளுங்கட்சிதான் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக குற்றச்சாற்று உள்ளதே என்ற கேள்விக்கு, எங்களுக்கு தெரிந்தவரை எங்கள் கூட்டணி கட்சியினர் யாரும் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் அவசியம் இல்லை. அப்படி ஓட்டுக்காக பணம் கொடுத்து வெற்றிபெற வேண்டிய அவசியமும் இல்லை என்றார்.
தேர்தலில் பணநாயகம் அனுமதிக்கப்பட்டதால் ஜனநாயகம் இல்லை என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளது பற்றி கேட்டதற்கு, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கொள்கை எதுவும் கிடையாது. அப்படியே கொள்கை இருந்தாலும் அதனை அவர்கள் பின்பற்றுவதில்லை. யாரையோ திருப்திபடுத்த அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தங்கபாலு கூறினார்.
சேது சமுத்திர திட்டம் நிறைவேற வாய்ப்பு உள்ளதா என்று கேட்டதற்கு, சேது சமுத்திர திட்டம் குறித்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தமிழகத்தில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்ற மக்களின் வேண்டுகோளை ஏற்று இந்த திட்டத்தினை துவங்க மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனை சோனியா காந்தி அடிக்கல் நாட்டி தற்போது 75 சதவீத பணிகள் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகள் இந்த திட்டத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் சூழ்ச்சி செய்துள்ளது.
நிலுவையில் உள்ள வழக்கில் சாதகமான தீர்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புகிறோம். அதையடுத்து இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த திடடம் முழுமை பெறும். அதன் மூலம் தமிழ்நாடு வளர்ச்சி பெறும் என்றார்.
தமிழகத்தில் விரைவில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று இளங்கோவன் கூறியுள்ளது பற்றி கேட்டதற்கு, தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்பதுதான் ஒவ்வொரு காங்கிசாருடைய விருப்பம். அதன்படி அவர் கூறியுள்ளார். இதில் தவறு ஏதும் இல்லை என்றார் தங்கபாலு.