இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து: இல.கணேசன் கோரிக்கை
சென்னை , திங்கள், 21 டிசம்பர் 2009 (15:54 IST)
இலங்கையில் வசிக்கும் இந்துக்கள் தமிழகத்திற்கு வந்து செல்ல வசதியாக கப்பல் அல்லது படகு போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று மாநில பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் உள்ள தமிழர்கள் பெரும்பாலும் இந்துக்களே. அவர்களில் பெரும்பாலானோர் சைவர்கள், சைவ மக்கள் பெரிதும் போற்றும் திருவாதிரை திருநாள் டிசம்பர் 31ஆம் தேதி வருகிறது. இதையொட்டி சிதம்பரத்தில் 11 நாள் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். இந்த வழிபாட்டில் நமது நாட்டவர் மட்டுமல்லாது அயல்நாடுகளில் வாழும் இந்துக்கள் குறிப்பாக சைவர்கள் பெருமளவில் கலந்துகொள்வது வழக்கம்.அதிலும் நமது தொப்புள் கொடி உறவுகளான இலங்கை வாழ் இந்துக்கள் இவ்விழாவில் கலந்து கொள்வதை பெரிதும் விரும்புபவர்கள். திருவாதிரையை முன்னிட்டு இலங்கை இந்துக்கள் சிதம்பரம் வருவது காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதன் பொருட்டே அவர்கள், தாங்கள் வரும்போது தங்குவதற்காக சிதம்பரத்தில் மடாலயங்களைக்கட்டி வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சொந்தமான அந்த மடாலயங்கள் இன்றும் இருக்கின்றன.போர் சூழல் காரணமாக அவர்களின் இந்த யாத்திரையில் சிறிது தொய்வு ஏற்பட்டிருந்தது. போர் முடிவடைந்த நிலையில் அவர்கள் இவ்வருடம் சிதம்பரம் வர ஆவலாய் இருக்கிறார்கள்.1992க்கு முன்பு வரை அவர்கள் இலங்கையின் வடக்கு பகுதியில் இருந்து படகு மற்றும் கப்பல் பயணமாக சிரமமின்றி தமிழகம் வந்து சென்றார்கள். ஆனால் நிலைமை தற்போது முற்றிலும் பாதகமாக அவர்களுக்கு இருக்கிறது.அவர்கள் தமிழகம் வரவேண்டுமானால் கொழும்பிலிருந்து விமானம் மூலமாக மட்டுமே வர முடியும். இது பல மடங்கு கூடுதல் செலவுக்கு வழி வகுப்பதோடு அதிக சிரமமானதாகவும் இருக்கிறது. தற்போதைய நிலையில் இலங்கையின் வடக்குப் பகுதி தமிழர்கள் கொழும்பு செல்வதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.எதிர்வரும் காலமாவது தங்களுக்கு ஏற்றம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்ற பெருத்த எதிர்பார்ப்போடு, புதிய விடியலுக்காக காத்திருக்கும் இலங்கைத் தமிழர்கள் அதற்காக தங்களின் முழு முதற் கடவுளான சிவபெருமானைஅவருக்கு விசேஷமான திருநாளில் தரிசிக்க பெரிதும் ஆவலாய் உள்ளார்கள்.இலங்கை தமிழர்களின் நம்பிக்கையை குலைப்பதற்கான ஏராளமான நிகழ்வுகள் கடந்த சில மாதங்களில் நிகழ்ந்துவிட்ட நிலையில், அவர்களின் முழு முதற் கடவுளை விடவும் அவர்களுக்கு அதிகம் நம்பிக்கை தருபவர் இன்று யார் உளர்? இலங்கைத் தமிழர்கள் நம்பிக்கை பெறுவது இன்றைய நிலையில் இன்றியமையாதது என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு இவ் விஷயத்தை இந்திய அரசும் இலங்கை அரசு கையாள வேண்டும்.முந்தைய காலங்களில் இருந்ததைப் போல் இலங்கையின் வடக்குப் பகுதியில் இருந்து படகு அல்லது கப்பல் பயணமாக அவர்கள் இந்தியாவிற்கு தமிழகத்திற்கு வருவதற்கு இந்திய அரசு அனுமதிக்க வேண்டும். அவர்கள் அங்கிருந்து சிதம்பரம் செல்ல தேவையான பேருந்து வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும். சிதம்பரத்தில் அவர்கள் தங்களது மடாலயங்களில் தங்கி கோயிலுக்கு சென்று வரும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மாநில அரசு செய்து தர வேண்டும். யாத்திரை முடிந்து அவர்கள் இதே முறையில் கப்பலில் தங்கள் நாட்டுக்கு செல்வதற்கும் வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும்.இலங்கைத் தமிழர்களின் மிக முக்கிய கோரிக்கையான இது விஷயத்தில் இந்திய அரசும் தமிழக அரசும் அக்கறை காட்ட வேண்டும். இலங்கை அரசிடம் பேசி தேவையான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும். இன்றைய நிலையில் இதைவிட அவர்களுக்கு வேறு என்ன நன்மையை நாம் செய்துவிட முடியும் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.