இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் அருந்ததிய சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்றுள்ளது.
அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு தமிழக அரசு இவ்வாண்டு ஏப்ரல் 29ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் மூலம் நடைமுறைக்கு வந்தது. ஆனால் அதற்கு முன்னதாக 5,773 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் நடந்து முடிந்தது. அரசு பிறப்பித்த அரசானையின்படி, இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, அதனை செயல்படுத்த இயலாது என்று அரசு தெரிவித்துவிட்டது.
இடைநிலை ஆசிரியர் தேர்வில் உள் ஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அருந்ததியினருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கியது. இதனால் அச்சமூகத்தைச் சேர்ந்த 173 பேருக்கு இடை நிலை ஆசிரியர் பணி வாய்ப்பு கிட்டியுள்ளது. இதனை சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி என்று கூறியுள்ள தீண்டாமை ஒழிப்பு முன்னணி, உயர் நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மாநில அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.