தென் மேற்கு வங்கக் கடலில், நாகப்பட்டினத்திலிருந்து தென் கிழக்காக நிலை கொண்டிருந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக உருவாகியிருப்பதையடுத்து நாளை முதல் தமிழ்நாடு, புதுவை கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மாலை 5 .30 மணிக்கு விடுத்துள்ள சிறப்பு வானிலை அறிக்கையில் தமிழ்நாடு, புதுவை மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று பிற்பகல் 2.30 மணிக்குப் பதிவான செயற்கைக்கோள் புகைப்படத்தில் சென்னையிலிருந்து தென் கிழக்காக 700 கி.மீ. தூரத்திலும், நாகையிலிருந்து தென் கிழக்காக 550 கி.மீ. தூரத்திலும் நிலைகொண்டுள்ள இந்தப் புயல் சின்னம், மேலும் வலுப்பெற்று வடககு மேற்கு வடக்காக தமிழ்நாடு, புதுவை கடற்கரையை நோக்கி வரும் என்றும், இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை கடலோரப் பகுதிகளில் நாளை முதல் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை அறிக்கைக் கூறியுள்ளது.
நாளை காலை முதல் மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திற்கும், சில நேரங்களில் 75 கி.மீ.வரையும் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரித்துள்ள அந்த அறிக்கை, கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்குமென்றும், மீனவர்கள் கடலிற்குச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னையில் சாரல் மழை!
இன்று காலை முதலே மேக மூட்டத்துடன் காணப்பட்ட சென்னையில் இன்று மதியம் 3.00 மணிக்குப் பிறகு ஆங்காங்கே சாரலாக மழை பொழிந்தது. விட்டுவிட்டுப் பொழியும் சாரல் மழையால் சென்னையில் குளிரான வெப்ப நிலை நிலவுகிறது.