"நடைபெறவுள்ள திருச்செந்தூர், வந்தவாசி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.இ. அ.தி.மு.க. போட்டியிடும்' என அக்கட்சிப் பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அ.இ.அ.தி.மு.க. தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, திருச்செந்தூர், வந்தவாசி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. நிச்சயம் போட்டியிடும். இதற்கு முன் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலை அ.இ.அ.தி.மு.க. புறக்கணித்தது.
தி.மு.க.வினரின் தேர்தல் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே கடந்த முறை இடைத்தேர்தலைப் புறக்கணித்தோம். எனினும் தொடர்ந்து புறக்கணிப்போம் என நான் ஒருபோதும் கூறியதில்லை. அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் கூட அ.இ.அ.தி.மு.க. போட்டியிட்டது. இனி வரும் எல்லா தேர்தல்களிலும் அ.இ.அ.தி.மு.க. பங்கேற்கும். அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சிகள் சேருமா என்பது குறித்து இப்போது எதுவும் கூறுவதற்கில்லை.
கரும்புக்கு ஆதாய விலை வழங்குவது தொடர்பான மத்திய அரசின் அவசரச் சட்டத்தை அ.இ.அ.தி.மு.க.தான் முதலில் எதிர்த்தது. அச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி நான் அறிக்கை வெளியிட்டேன். பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக இந்தியாவிலுள்ள எல்லா எதிர்க்கட்சிகளும் அச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அறிந்தபின் இப்போது தி.மு.க.வும் அச்சட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளது. தி.மு.க.வின் இந்த செயல் வெறும் சந்தர்ப்பவாதம்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக வெளியாகியுள்ள பல்வேறு ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி நான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் இப்பிரச்சனையில் மத்திய அரசு தொடர்ந்து மெளனம் சாதிக்கிறது. எனது கடிதத்துக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் பலன் அடைந்தவர்கள் யார் என்பதை அறிவது மிகவும் அவசியம். ஆனால், தொலை தொடர்புத் துறை அமைச்சராக ஆ. ராசா இருக்கும் வரை, இப்பிரச்சனையில் சி.பி.ஐ.யால் சுதந்திரமான விசாரணை நடத்த முடியாது. எனவே ராசாவை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்.
இலங்கைப் பிரச்சனையில் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பங்காற்றுவதற்கான வாய்ப்பு தொடக்கத்திலிருந்தே இந்திய அரசுக்கு இருந்து வந்தது. ஆனால் அதை இந்தியா சரியாக செய்யவில்லை. மாறாக இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்கே இந்திய அரசு உதவி செய்தது.
இலங்கையில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்கள், ஹிட்லர் காலத்தில் நாஜி படைகளால் நடத்தப்பட்ட சித்ரவதை முகாம்களைப் போலவே உள்ளன. இந்தியா இப்போதாவது தமது தவறை உணர வேண்டும். முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் விடுவிக்கப்படவும், அவரவர் சொந்த இடங்களில், சுய நிர்ணய உரிமையோடு வாழவும் உதவ வேண்டும்.
இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை அளிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். குடியுரிமை அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தால், அ.இ.அ.தி.மு.க. அதை ஆதரிக்கும். இலங்கை அகதிகளுக்கு உதவுவதற்காக தமிழக அரசு இப்போது ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது மிகவும் காலம் கடந்த முடிவு. இதை எப்போதோ செய்திருக்க வேண்டும். இப்போது திடீரென அவ்வாறு முடிவெடுத்திருப்பது, தி.மு.க. அரசின் சந்தர்ப்பவாத நடவடிக்கை ஆகும் என்று ஜெயலலிதா கூறினார்.