ஸ்பெக்ட்ரம் உண்மைகளை சி.பி.ஐ வெளிக்கொணர வேண்டும்: ஜெயலலிதா
சென்னை , வியாழன், 29 அக்டோபர் 2009 (15:49 IST)
''ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான ஊழலில் உண்மைகள் வெளிவரும் அளவுக்கு சி.பி.ஐ தனது விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்'' என ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தொலை தொடர்புத் துறை அலுவலகங்களில் சி.பி.ஐ அண்மையில் சோதனை நடத்தியது. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் தவறான கொள்கையை கடைபிடித்ததன் விளைவாக ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் நாட்டிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதையடுத்து நடைபெற்ற முறையான சோதனை தான் இது.பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடைபெறாது என்பதற்கு இடமளிக்கும் வகையில், அண்மை காலத்தில் நடைபெற்ற இந்த மிகப் பெரிய ஊழலுக்கு தலைமை தாங்கிய மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா பதவி விலக முடியாது என்று பிடிவாதமாக அறிவித்திருக்கிறார். பிரதமரும் அமைச்சர் ராசாவை ராஜினாமா செய்யச் சொல்லவில்லை.தனக்கு முன்பு இந்தப் பதவியை வகித்து வந்த தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதி மாறன் பின்பற்றிய அதே முறையைத் தான் தானும் பின்பற்றியதாகவும், பிரதமரின் சம்மதத்துடனும், அனுமதியுடனும் தான் அனைத்தும் நடைபெற்றதாகவும் ராசா பகிரங்கமாகத் தெரிவிக்கிறார். இதை மன்மோகன் சிங் ஒப்புக்கொள்கிறாரா? இதனால் தான் ராசா ராஜினாமா செய்ய வேண்டாமென்று நினைக்கிறாரா?மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பதவியிலிருந்து ராசாவை நீக்கினால் தான் இந்த வழக்கில் நியாயம் கிடைக்கும். இல்லையெனில், மத்திய அமைச்சர் ராசா சொல்வதை கேட்கக்கூடிய சில துறை அலுவலர்கள் மீது மட்டும் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்வதுடன் தன்னுடைய பணியை மத்திய புலனாய்வுத் துறை நிறுத்திவிடும்.இரண்டாவது தலைமுறைக்கான அலைவரிசை விற்பனை முழுவதும் ஆட்சேபகரமானது. விலை மதிப்புடைய அலைவரிசை ஒதுக்கீடு சிறு நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் தங்கள் பெயர்களில் அலைவரிசை ஒதுக்கீட்டை பெற்றவுடன், தங்கள் நிறுவனத்தின் பங்குகளை அதிக விலைக்கு தொலைதொடர்புத் துறையில் சிறந்து விளங்கும் சர்வதேச நிறுவனங்களுக்கு விற்றுவிட்டன.இந்திய அரசு இந்த அலைவரிசை ஒதுக்கீட்டை நேரடியாக சர்வதேச நிறுவனங்களுக்கு விற்றிருந்தால், தனியார் நிறுவனங்களுக்கு கிடைத்த அதிக லாபம் மத்திய அரசுக்கு கிடைத்திருக்கும். இந்த இழப்பு தான் ரூ. 60,000 கோடி முதல் ரூ. ஒரு லட்சம் கோடி வரை என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சிலர் பயனடைந்திருக்க வில்லையெனில், ஏன் இந்த அலைவரிசை ஒதுக்கீட்டை அடிமாட்டு விலைக்கு மத்திய அரசு விற்றது?இந்த முறைகேட்டின் மூலம் யாராவது ஆதாயம் அடைந்தார்கள் என்றால், யார் அந்தப் பயனாளிகள்? இந்தக் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் வரையில், மத்திய புலனாய்வுத் துறை இது குறித்து நடத்தும் விசாரணைக்கு எந்த அர்த்தமும் இருக்காது. சில தொலைத் தொடர்பு அலுவலகங்களையும், சில தொலைதொடர்புத் துறை அதிகாரிகளின் இல்லங்களையும் சோதனை செய்வதுடன் இந்த விசாரணையை சி.பி.ஐ நிறுத்திவிடக் கூடாது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அமைச்சர் ராசாவின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஸ்வான் டெலிகாம் தன்னுடைய பங்குகளை சர்வதேச ஜாம்பவான்களான எடிஸலட் மற்றும் இடிஏ அஸ்கான் நிறுவனங்களுக்கு எப்படி விற்றது என்பதை கண்டறிய வேண்டும்.2004
ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் ராசாவுக்கு நெருக்கமானவர்களால் வெறும் ஒரு லட்ச ரூபாய் பங்கு முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று பல ஆயிரம் கோடிகள் மதிப்புடையதாக விளங்கும் கிரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்திற்கும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பை கண்டறிய வேண்டும். இ.டி.ஏ. குழுமத்திற்கும் 2008 ஆம் ஆண்டு வெறும் ஒரு லட்ச ரூபாய் பங்கு முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஜெனெக்ஸ் எக்சிம் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பையும், பின்னர் 380 கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்வான் டெலிகாம் பங்குகளை வாங்கியதையும் கண்டறிய வேண்டும்.இ.டி.ஏ. குழுமத்திற்கும் முதலமைச்சர் கருணாநிதிக்கும் உள்ள தொடர்பை கண்டறிய வேண்டும். இது போன்ற முழுமையான விசாரணை நடத்தினால் தான், புதிய தலைமைச் செயலக வளாகம், புதிய மாநில நூலகம், தமிழக நெடுஞ்சாலைத் துறையின் பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் உட்பட, பல்வேறு முக்கிய கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் இ.டி.ஏ. குழுமத்தின் இயக்குநர்களுக்கும் முதலமைச்சர் கருணாநிதிக்கும் உள்ள நிதித் தொடர்புகள் குறித்த உண்மை நிலைமை தெரியவரும்.இது போன்ற புலனாய்வில், தமிழக அரசின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சர்ச்சைக்குரிய அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பெற்றுள்ளது இந்த இ.டி.ஏ. குழுமத்தின் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் தான் என்பது தெரிய வரும். கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஸ்டார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை பதிவு செய்ததும் இந்த இ.டி.ஏ. குழுமம்தான் என்பதும் வெளிப்படும்.தன்னுடைய மகன் மு.க.முத்துவை எம்.ஜி.ஆருக்கு போட்டியாக உருவாக்க நினைத்து தயாரிக்கப்பட்டு படுதோல்வி அடைந்த "பிள்ளையோ பிள்ளை" திரைப்படத்தின் விநியோகத்தை எடுத்ததற்கு கைமாறாக மேற்படி பணிகள் அந்த நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டன என்பதும் விசாரணையில் தெரிய வரும். ஆனால் இதில் உள்ள எல்லா உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரவேண்டுமானால், ராசாவை மத்திய அமைச்சரவையிலிருந்து பிரதமர் நீக்க வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.