Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தி திணிப்பு ஆபத்தை நிரந்தரமாக தடு‌க்க வேண்டும்: ராமதாஸ் வ‌லியுறு‌த்த‌ல்

இந்தி திணிப்பு ஆபத்தை நிரந்தரமாக தடு‌க்க வேண்டும்: ராமதாஸ் வ‌லியுறு‌த்த‌ல்
சென்னை , புதன், 26 ஆகஸ்ட் 2009 (08:53 IST)
''அண்ணா நூற்றாண்டு விழாவில் 'இந்தி திணிப்பு' என்கிற ஆபத்தை நிரந்தரமாக தடுத்து நிறுத்தவேண்டும்'' என்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

FILE
இது தொட‌ர்பாக அவ‌ர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக பதுங்கியிருக்கும் 'இந்தி திணிப்பு' என்கிற பூதம் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தலைகாட்ட தொடங்கிவிடுகிறது. இந்தி பேசாத மக்கள் மீது இந்தி கட்டாயமாக திணிக்கப்பட மாட்டாது என்று பண்டித நேரு அளித்த உறுதிமொழி, பின்னர் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் போன்ற பிரதமர்களால் உறுதி செய்யப்பட்டு இன்றுவரையில் இந்தி திணிப்பு என்கிற ஆபத்து தடுத்து நிறுத்தப்பட்டு வந்திருக்கிறது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமை‌ச்ச‌ர் கபில்சிபல் கல்வி மாநாடு ஒன்றில் பேசியதாக வெளிவந்துள்ள செய்தி, மீண்டும் அந்த ஆபத்து தலைதூக்குகிறதோ என்ற அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. ''இந்தி தேசிய மொழி; எனவே, நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் அது கற்பிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு இதுதான் சரியான நேரம்'' என்று மத்திய அமை‌ச்ச‌ர் கபில்சிபல் பேசியிருக்கிறார்.

இது அவரது சொந்தக்கருத்தா? அல்லது அவர் சாந்துள்ள அரசின் கருத்தா? என்பது தெரியவில்லை. எதுவாக இருப்பினும், அவர் பேசியிருப்பதைப்போல, நாடு முழுவதும் உள்ளவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட இத்தகைய நடவடிக்கை உதவாது என்பது அவருக்கும், அரசுக்கும் உரிய முறையில் உணர்த்தப்பட வேண்டும்.

மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ இந்தியை திணிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம் நேருவின் உறுதிமொழியை தொடர்ந்து நிறைவேற்றி வர வேண்டும் என்று தமிழகத்திலிருந்து குரல் எழுப்பப்பட்டு வந்திருக்கிறது. அதேநேரத்தில், நேரு அளித்த உறுதிமொழியை அரசியல் சட்டத்தில் இடம்பெற செய்வதில் தமிழகம் தவறியிருக்கிறது என்பதும் கசப்பான உண்மையாகும்.

இந்தி திணிப்பை எதிர்த்து எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அவை அனைத்தும் போட்டி அரசியலுக்கு பயன்பட்டிருக்கிறதே தவிர, இந்தி திணிப்பு என்கிற ஆபத்தை நிரந்தரமாக தடுத்து நிறுத்த உதவவில்லை என்பது இன்றைக்கும் நிதர்சனமான உண்மையாகும். இந்தி திணிப்பு என்கிற ஆபத்தை நிரந்தரமாக தடுத்து நிறுத்துவதற்கு இப்போது சிறந்ததொரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழா விரைவிலேயே கொண்டாடப்பட இருக்கிறது. சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். எத்தனையோ சிறப்பான காரியங்கள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், தமிழ் உள்பட அனைத்து தேசிய மொழிகளும் மத்தியில் ஆட்சி மொழிகளாக்கப்படுகிறது என்கிற அறிவிப்பினை பெற்று, அதன் மூலம் தமிழர்களின் தலைக்குமேல் பல்லாண்டு காலமாக தொங்கிக் கொண்டிருக்கும் 'இந்தி திணிப்பு' என்கிற கத்தியை அகற்றிவிட்டோம் என்ற நிலையை ஏற்படுத்தினால் அது அனைத்திற்கும் மேலான சிறப்பாக அமையும். அண்ணாவின் கொள்கையும் நிறைவேறும். அதற்கான முயற்சியை தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் உடனடியாக மேற்கொண்டு அந்த வெற்றி செய்தியிணை அண்ணா நூற்றாண்டு விழாவில் அறிவிக்க செய்து புகழ் சேர்க்கவேண்டும்'' எ‌‌ன்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil