இந்து ஒற்றுமை உணர்வோடும், சாதி நல்லிணக்கத்திற்காகவும் உற்சாகத்தோடு வரும் இளைஞர்களுக்கு விநாயகர் வைத்து வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது என்று குற்றம்சாற்றியுள்ள இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன், இந்த விடயத்தில் முதலமைச்சர் கருணாநிதி தலையிட்டு ஊர்வலம் சுமூகமாக நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பல வருடங்களாக விநாயகர் சதுர்த்தி திருவிழா மிக சிறப்பான முறையில் நடைபெற்று வந்துள்ளது. சாதி ஏற்றத் தாழ்வுகளைக் களையும் வகையிலும், இந்துக்களை ஒன்றிணைக்கும் வகையிலும் இந்த திருவிழாவானது 3 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை சிறப்பாக நடைபெறும். நிறைவு நாளன்று ஊர்வலமும், சிலைக்கரைப்பும் நடைபெறும்.ஆனால் இந்த வருடம் எப்போதும் இல்லாமல் சில அதிகாரிகளின் பல தடங்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது. எக்காரணமும் இன்றி தேவையற்ற தொல்லைகளை அந்த சில அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர். இந்து ஒற்றுமை உணர்வோடும், சாதி நல்லிணக்கத்திற்காகவும் உற்சாகத்தோடு வரும் இளைஞர்களுக்கு விநாயகர் வைத்து வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது.ஆகவே தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் இவ்விடயத்தில் தலையிட்டு விழா, ஊர்வலம் சுமூகமாக நடைபெற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், பிரச்சனை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கைகளை எடுக்கவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது'' என்று ராம.கோபாலன் கூறியுள்ளார்.