சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பான விவரங்களை தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் தீர்மானத்தை அமல் செய்யக்கூடாது என நிதிச் செயலருக்கு உத்தரவிடக்கோரி டிராபிக் ராமசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில், ''சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த சில ஆண்டுகளிலேயே 3வது முறையாக ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கு கௌரவ அடிப்படையிலேயே ஊதியம் வழங்கப்படுகிறது. சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, வழங்கப்படும் படிகள் உட்பட பல்வேறு சலுகைகள் அவர்களுக்கு இருக்கின்றன.
மேலும் அவர்களுக்காக வீட்டுமனை வழங்கும் திட்டமும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கான சம்பள சுமையால் அரசு அவதிப்படுகிறது. இந்நிலையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை விட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படும் நிலை உண்டாகியுள்ளது.
எனவே சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சம்பள உயர்வு தீர்மானத்தை அமல் செய்யக் கூடாது என நிதிச் செயலருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜாகலிபுல்லா ஆஜராகி வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பான விவரங்களை அரசிடமிருந்து பெற்று தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.