Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம்

Advertiesment
கலைஞர் காப்பீட்டு திட்டம்
சென்னை , திங்கள், 27 ஜூலை 2009 (12:27 IST)
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனையில் மட்டும் இல்லாமல், அரசு மருத்துவமனையிலும் ஏழைகள் சிகிச்சை பெறலாம்.

ஏழை மக்கள் ரூ.1 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் இலவச உயர் சிகிச்சை பெறுவதற்கு 'உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' கடந்த 23ஆம் தேதி முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி தலைமையில் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் சென்னையில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு தனியார் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெறலாம். இதனால் ஒரு கோடி ஏழை குடும்பங்கள் பயனடைய உள்ளனர். சிகிச்சைக்கான செலவை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார் மருத்துவமனைக்கு செலுத்தும்.

இதற்கான காப்பீட்டுத் தொகையாக ஆண்டுக்கு ரூ.517 கோடியை இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அரசு செலுத்தும். இத்திட்டத்தின்படி தனியார் மருத்துவமனைகளில் மட்டும் இல்லாமல், அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம்.

இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குனர் விநாயகம் கூறுகை‌யி‌ல், அரசு மருத்துவமனையில் உள்ள கட்டண வார்டில் நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் இருப்பது போல் அரசு கட்டண வார்டுகளிலும் தனியாக மரு‌த்துவ‌ர்கள், செ‌வி‌லிய‌ர்க‌ள் இருப்பார்கள். அதனால், சிகிச்சைக்கு வருபவர்கள் பலரும் இந்த வார்டுகளை கேட்கின்றனர்.

இதனால் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பணம் செலவாகிறது. இந்த காப்பீட்டு திட்டத்தால் அரசு மருத்துவமனைகளில் உள்ள கட்டண வார்டுகளில் பட்டியலில் இடம்பெற்றுள்ள நோய்களுக்கு நோயாளிகள் இலவசமாக சிகிச்சை பெறலாம்.

தனியார் மருத்துவமனையில் ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவாகும் சிகிச்சைக்கு, அரசு மருத்துவமனைக்கு வந்தால் சிகிச்சை பெறலாம்.
அதற்கான செலவை அந்த இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் மருத்துவமனைக்கு கட்டிவிடும்.

இந்த பணத்தை வைத்து மருத்துவமனை சீரமைப்பு பணிகள், மருத்துவக் கருவிகள், மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கு பயன்படுத்தப்படும். இதன் மூலம் அரசுக்கு மேலும் வருவாய் கிடைக்கும். மருத்துவமனையின் தரமும் உயரும். பொது மக்களின் வருகையை பார்த்து அரசு மருத்துவமனைகளில் கட்டண வார்டுகள் அதிகரிக்கப்படும் எ‌ன்று விநாயகம் தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனைகளின் பெயர்கள் விரைவில் வெளியீடு

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத் தலைவர் வி.ஜெகந்நாதன் கூறுகை‌யி‌ல், 'கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் பொது மக்கள் சிகிச்சை பெற விரும்பினால் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ), வருவாய் அதிகாரி, வரி வசூலிப்பவரிடம் இருந்து சான்றிதழை பெற்று கொண்டு மருத்துவமனைக்கு வரவேண்டும்.

இதேபோல் நலவாரியங்களில் உள்ளவர்கள் சிகிச்சை பெறுவதற்கு தங்களுடைய அடையாள அட்டையுடன் வர வேண்டும். பட்டியலிடப்பட்டுள்ள நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதியும் உடைய அரசு மருத்துவமனையில் மட்டும் இந்த திட்டம் செயல்படும்.

இந்த திட்டம் செயல்படுத்தப்படும் தனியார் மருத்துவமனைகளின் விவரம் ஒரு வாரத்துக்குள் தெரிவிக்கப்படும். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகளும் நடந்து வருகிறது' எ‌ன்று ஜெகந்நாதன் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil