காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் குறிப்பிட்ட நாளில் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் போன்ற அணைகள் நிரம்பின. இதனால் இரு அணைகளிலும் இருந்தும் தமிழகத்தின் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த 13ஆம் தேதி முதல் நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை 8 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 93.15 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 27 ஆயிரத்து 815 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
காவிரி டெல்டா பாசனத்திற்காக வரும் 28ஆம் தேதி (நாளை) தண்ணீர் திறக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருந்திருந்தார். அதன்படி நாளை மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.