தமிழகத்தில் அடுத்த மாதம் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடப் போவதில்லை என்று அக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், வாக்காளர்களுக்கு லஞ்சப் பணம் அளிப்பதை தேர்தல் ஆணையம் தடுக்காதவரை தேர்தலில் போட்டியிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறினார்.
அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதை நாட்டு மக்களும், தேர்தல் ஆணையமும் நன்கு அறியும் என்று கூறிய அவர், மத்திய துணை ராணுவப்படையினர் முன்னிலையிலேயே பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்று குறைகூறினார்.
வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டது என்றும், இதனை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளிப்படையாக தெரிவித்திருந்தார் என்றும் டாக்டர் ராமதாஸ் குறைகூறினார்.
இதுபோன்ற சூழ்நிலையில், ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதால், பாமக போட்டியிடப்போவதில்லை என்று கூறினார்.
வாக்காளர்களுக்கு பணம் வழங்குபவர்களைக் கண்காணிக்க தேர்தல் ஆணையம் 5 தொகுதிகளிலும் 100 இடங்களில் உளவு முகவர்களை நிறுத்த வேண்டும் என்றும், பணம் வழங்குவது கண்டறியப் பட்டால், தேர்தலை நிறுத்த வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தினார்.
பணம் வழங்குவதை தேர்தல் ஆணையம் தடுக்கத் தவறினால், `திருமங்கலம் திருவிளையாடல்' போன்று இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்றதாக தேர்தல் நடத்தாமலேயே அறிவித்து விடலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்டு பாமக அனைத்திலும் தோல்வியடைந்தது.