இலங்கையில் போரை நிறுத்த ஐ.நா தவறி விட்டது: பழ.நெடுமாறன் குற்றச்சாற்று
சென்னை , திங்கள், 20 ஜூலை 2009 (09:03 IST)
இலங்கையில் போரை நிறுத்த ஐ.நா. தவறிவிட்டது என்று குற்றம்சாற்றி உள்ள இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், அகதிகள் முகாம்களில் உணவு, மருந்து, குடிநீர் இன்றி தினமும் 200 பேர் பரிதாபமாக செத்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை செய்வதற்காக, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பேசிய இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், இலங்கையில் கடந்த 6 மாத காலத்தில் ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அங்கு நடைபெற்று வரும் போரை நிறுத்த ஐ.நா. உள்பட உலக நாடுகள் தவறிவிட்டன என்றும் குற்றம்சாற்றினார்.தற்போது, 3 லட்சம் தமிழர்கள் மின்வேலி கொண்டு அமைக்கப்பட்ட அகதிகள் முகாம்களில் உணவு, மருந்து, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர் என்றும் அதில், தினமும் 200 பேர் பரிதாபமாக செத்து வருகின்றனர் என்றும் பழ.நெடுமாறன் வேதனை தெரிவித்து பேசினார்.முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்த பழ.நெடுமாறன், அதற்காக நாம் தமிழக கிராம மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்த வேண்டும் என்றார்.