Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை அதிமுக செயற்குழு: அதிரடி முடிவுகள் எடுக்கப்படுமா?

Advertiesment
நாளை அதிமுக செயற்குழு: அதிரடி முடிவுகள் எடுக்கப்படுமா?
சென்னை , ஞாயிறு, 19 ஜூலை 2009 (10:16 IST)
குன்னூரில் நாளை நடைபெறும் அ.இ.அ.தி.மு.க செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் கட்சியில் பெரிய அளவில் மாற்றங்கள் நடைபெறும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், குன்னூரில் நடக்கும் செயற்குழு கூட்டத்திற்கு வர வேண்டாம் என 10 எம்.எல்.ஏ.க்களுக்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகஸ்டு 18ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க. செயற்குழுவின் அவசர கூட்டம் குன்னூர் உபாசி சாலையில் உள்ள விவேக் விடுதியில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.

கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா பங்கேற்கிறார். 5 தொகுதிகளில் நடக்க உள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவது குறித்தும், கூட்டணி தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபையில் உள்ள 60 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் செயற்குழு உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில், அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர் தொகுதி), கோ.அரி (திருத்தணி), அக்ரி கிருஷ்ணமூர்த்தி (கலசப்பாக்கம்), கலைராஜன் (தியாகராயநகர்), அருண்மொழித்தேவன் (சிதம்பரம்), மகேந்திரன் (உசிலம்பட்டி), துரைராஜ் (சேடப்பட்டி), சாமி (மேலூர்), சின்னசாமி (மருங்காபுரி) ஆகியோர் செயற்குழு கூட்டத்திற்கு வர வேண்டாம் என்றும், அவர்கள் சட்டப்பேரவை நடவடிக்கையில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த 10 பேரில் ஓ.பன்னீர்செல்வம் எதிர்கட்சி துணைத்தலைவர் என்கிற முறையில் சட்டசபையில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் போலீஸ் துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது பேச இருக்கிறார். மற்றவர்களை பொருத்தவரை நாளைய நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெரியதாக அவர்களது பங்களிப்பு எதுவும் இருக்க போவதில்லை.

எனவே, ஏதோ ஒரு காரியத்தை மனதில் வைத்துக்கொண்டு ஜெயலலிதா இந்த 10 பேரை செயற்குழுவுக்கு வர வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். எது எப்படி இருந்தாலும் இந்த செயற்குழு அவசர கூட்டம் முடிந்ததும் கட்சியில் பெரிய மாற்றங்கள் ஏற்படுவது உறுதி என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது. பலரது பதவியில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil