முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று பால் உற்பத்தியாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
பால் கொள்முதல் விலையை உயர்த்தும்படி, பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். பசும்பால் லிட்டருக்கு ரூ.20, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.30 வீதம் கொள்முதல் விலையாக நிர்ணயிக்கும்படி வற்புறுத்தினர்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், ஜுலை 9ம் தேதி முதல் காலவரையற்ற முறையில் பால் வினியோகத்தை நிறுத்தப்போவதாகவும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலசங்கம் அறிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கறவை மாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பல்வேறு மாவட்டங்களில் சாலையில் பாலை கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது.
இந்த பிரச்சினை, தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது. அப்போது இதுதொடர்பான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர் கருணாநிதி, பால் கொள்முதல் விலை உயர்வு பற்றி வரும் 22ம் தேதிக்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும், அதுவரை பால் உற்பத்தியாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த வேண்டுகோளை ஏற்று,தங்களது போராட்டத்தை ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் செங்கோட்டுவேல் கூறுகையில், "முதல்வர்ர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை ஒத்திவைக்கிறோம். பால் கொள்முதல் விலையை உயர்த்தும் விஷயத்தில் அவர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம்" என்றார்.