பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1,184 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த ஊத்தங்கரை பள்ளி மாணவர் எஸ்.பாலமுருகனுக்கு முதலமைச்சர் கருணாநிதி இன்று பரிசு வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் எஸ்.பாலமுருகன் பிளஸ்2 தேர்வில் 1,176 மார்க் பெற்று இருந்தார்.
இவர், தேர்வு நன்றாக எழுதியும் மார்க் குறைந்த அளவே கிடைத்திருப்பதாக கருதினார். எனவே மறு கூட்டலுக்கும், மறு மதிப்பீட்டுக்கும் விண்ணப்பித்து இருந்தார்.
இதில் மாணவர் பாலமுருகனுக்கு தமிழில் கூடுதலாக 8 மதிப்பெண் கிடைத்திருந்தது. இதனால் அவருக்கு தமிழ் பாடத்தில் கிடைத்த மதிப்பெண் 195 ஆனது. இதைத்தொடர்ந்து, பாலமுருகன் பெற்ற மொத்த மதிப்பெண் 1,184 ஆக உயர்ந்து விட்டது. இது ஏற்கனவே முதல் இடத்தை பிடித்த 4 பேர் பெற்ற மதிப்பெண்ணை விட ஒரு மார்க் அதிகம் ஆகும்.
இதைத் தொடர்ந்து பிளஸ்2 தேர்வில் 1,184 மதிப்பெண் பெற்ற ஊத்தங்கரை பள்ளி மாணவர் பாலமுருகனுக்கு பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி, பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் தமிழை ஒரு பாடமாக படித்து மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவர் எஸ்.பாலமுருகனுக்கு ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கிப் பாராட்டியதுடன், பரிசு பெற்ற மாணவருக்கு எந்தக் கல்லூரியில், எந்தப் பட்டப் படிப்பில் சேர்ந்து படித்தாலும், அதற்குரிய செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்பதற்கான சான்றிதழையும் வழங்கி, வாழ்த்துகள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித்துறை செயலர் எம்.குற்றாலிங்கம், பள்ளிக் கல்வி இயக்குனர் பி.பெருமாள்சாமி, அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் மற்றும் மாணவரின் பெற்றோர் உடனிருந்தனர்.