Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லஞ்ச ஊழல் இல்லாத இந்தியாவை காண வேண்டும் : அப்துல் கலா‌ம்

லஞ்ச ஊழல் இல்லாத இந்தியாவை காண வேண்டும் : அப்துல் கலா‌ம்
சென்னை , செவ்வாய், 23 ஜூன் 2009 (11:06 IST)
லஞ்ச ஊழல் இல்லாத இந்தியாவை காண வேண்டும் என்று கனவு காண்பதாக மு‌ன்னா‌ள் குடியரசு‌த் தலைவ‌ர் அப்துல் கலாம் கூறினார்.

`மெட்ராஸ் காஸ்மோ பாலிட்டன் ரவுண்ட் டேபிள்-94' அமைப்பு சார்பில் சென்னையில் 5 அரசு பள்ளிக்கூடங்களுக்கு ரூ.2 கோடியே 25 லட்சம் செலவில் 55 வகுப்பறைகளும், 22 கழிப்பிடங்களும் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. `கல்வி மூலமாக விடுதலை' என்ற திட்டத்தின் கீழ் இந்த வசதி செய்துதரப்பட்டுள்ளது.

புதிய வகுப்பறைகளின் திறப்புவிழா சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று மாலை நடந்தது. இதில் முன்னாள் குடியரசு‌த் தலைவ‌ர் அப்துல் கலாம் கலந்துகொண்டு வகுப்பறை கட்டிடங்களை திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகை‌யி‌ல், நான் குடியரசு‌த் தலைவராக இருந்தபோதும், இப்போது இந்தியாவிலோ அல்லது அய‌ல்நாடுகளுக்கோ செல்லும்போதும் பள்ளிக்கூடத்திற்கு சென்று மாணவர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். வகுப்பறைகள் மாணவ-மாணவிகளை ஈர்க்கும் வகையிலும் படைப்பாற்றலை தூண்டும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஆர்வத்தோடு பள்ளிக்கூடத்திற்கு வருவார்கள்.

ஆசிரியர் பணியை விரும்பி செய்யக்கூடிய நபர்கள் ஆசிரியர் வேலைக்கு வர வேண்டும். ஒரு மாணவனை நல்ல முறையில் உருவாக்குவதில் பெற்றோருக்கும், தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கும் பெரும் பங்கு உண்டு. மாணவர்கள் ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக்கொண்டு அதற்காக கடுமையாக உழைத்தால் நிச்சயம் குறிக்கோளை அடைய முடியும். அதை நினைத்து கனவு காண வேண்டும்.

இப்போது நானும் ஒரு கனவு காண்கிறேன். கிராமப்புறம்-நகர்ப்புறம் என்ற பாகுபாடு இல்லாத இந்தியாவை, அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவ வசதி கிடைக்கக்கூடிய இந்தியாவை, லஞ்சமும், ஊழலும் இல்லாத இந்தியாவை, வெளிப்படையான அரசு நிர்வாகம் நடக்கக்கூடிய இந்தியாவை, தீவிரவாதம் இல்லாத இந்தியாவை காண வேண்டும் என்று கனவு காண்கிறேன்.

இவை எல்லாம் நடக்கக்கூடிய காரியமா? என்று கேள்வி எழலாம். கண்டிப்பாக நடக்கும் என்று ஒவ்வொருவரும் நினைத்தால், அதற்கேற்ப செயல்பட்டால் நிச்சயம் சாத்தியம்தான் எ‌ன்று அப்துல் கலாம் கூறினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil