சென்னை: சென்னை கோட்டையில் தலைமை செயலகத்தில் எழுதுபொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் நேற்றிரவு திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
இதில் அறையில் வைக்கப்பட்டிருந்த எழுதுபொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
தலைமைச் செயலக பழைய கட்டிடத்தின் 3-ஆவது மாடியில் பொதுத்துறையின் அலுவலக நடைமுறை பிரிவு அறையில் இருந்து திடீரென்று புகை வந்தது.
இதைப் பார்த்த காவலாளி ராமசாமி தீயணைப்புத்துறைக்கு உடனே தகவல் கொடுத்தார்.
தலைமைச் செயலகத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருக்கும் தீயணைப்பு வண்டியுடன் விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அருகில் உள்ள பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வண்டிகள் வந்தன.
ஆவணங்கள் எதுவும் சேதமின்றி தப்பின. எழுதுபொருட்கள் (ஸ்டேஷனரி) மட்டுமே தீயில் கருகியதாகவும், மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.