Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈழம் வேண்டும் என்பது தேச விரோதமா? ஜெயலலிதா கேள்வி

ஈழம் வேண்டும் என்பது தேச விரோதமா? ஜெயலலிதா கேள்வி
சென்னை , செவ்வாய், 28 ஏப்ரல் 2009 (10:17 IST)
இலங்கையில் தனி ஈழம் அமைப்பதுதான் ஒரே தீர்வு என்று நான் சொன்னது எந்த இந்திய சட்டத்துக்கு எதிரானது என, மத்திய அமை‌ச்ச‌ர் கபில் சிபலுக்கு, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

WD
இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தனி ஈழம் வேண்டும் என்று நான் பேசிய பேச்சு, தேசவிரோதமானது, பொறுப்பற்ற தன்மையைக் காட்டுவதாக உள்ளது என்று மத்திய அமை‌ச்ச‌ர் கபில் சிபல் கூறியுள்ளார். எந்தவிதமான தீவிரவாதமாக இருந்தாலும், அதனை நான் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறேன். சுதந்திரப் போராட்டம் என்ற போர்வையில் தீவிரவாத வேலைகளில் ஈடுபடும் அமைப்புகளை நான் ஆதரிக்க முடியாது, ஆதரிப்பதும் இல்லை. இதுபோல், பன்முக தீவிரவாதத்தையும், அரசாங்கமே பொதுமக்களின் பெரும்பகுதியினரை படுகொலை செய்வதையும் நான் தொடர்ந்து எதிர்த்து வருகிறேன்.

இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் தேவையற்ற போரின் காரணமாக அங்குள்ள 3 லட்சம் தமிழர்கள் சொந்த வீடு, நிலங்களை இழந்தும், உணவு, போதுமான மருத்துவ வசதி இன்றியும் தவித்து வருகிறார்கள். அரசு அமைத்துள்ள அடிப்படை வசதிகளற்ற மோசமான நிலையில் உள்ள முகாம்களில் சிக்காத தமிழர்கள், விடுதலைப்புலிகள், சிங்கள ராணுவம் இடையே மோதல் நடைபெற்று வரும் போர்க்களத்தில் நேரடியாக சிக்கித் தவித்து வருகிறார்கள்.

இலங்கையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள், தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டு, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா மற்றும் பல்வேறு நாடுகளில் அகதிகளாக புகலிடம் கோரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நீதி அளிக்கப்படவேண்டும்.

இலங்கையில் வசிக்கும் லட்சக்கணக்கிலான அப்பாவி தமிழ் மக்கள், விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவத்துக்கு இடையே நடைபெறும் போரில் சிக்கித் தவிப்பதால், அங்கு போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அங்கு நடைபெற்று வரும் தேவையற்ற போர், மேலும், மேலும் பல உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகத்தான் உள்ளது. இலங்கை அரசு போரை நிறுத்துவது மட்டுமின்றி, அதற்கு மேலாக செயல்பட்டு, அங்குள்ள தமிழ் மக்களின் உண்மையான பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இடங்களைப் பிரித்து, இலங்கையில் அரசியல் அமைப்புக்கு உள்பட்டு தனி அதிகாரம் கொண்ட பகுதியாக இருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தேன். இலங்கை அரசு இது போன்ற எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ள தயாராக இல்லாததால், ஐ.நா. சபை, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் (சீனாவை தவிர்த்து) அறைகூவலை ஏற்காமல் புறம் தள்ளியது. எனவே, தமிழ் ஈழம் அமைப்பதே இப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு.

லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டு வரும் சூழலில், தனி ஈழம் வேண்டும் என்று நான் கூறியதில், இந்திய தேசத்துக்கு விரோதமான கருத்தாக மத்திய அமை‌ச்ச‌ர் கபில் சிபல் எதைக் கண்டார்? இந்த கருத்தை கூறிய வகையில், எந்த இந்திய சட்டத்தை நான் மீறினேன்?

கபில் சிபலை கேட்கிறேன். இந்தியாவில் இருந்து எந்த மாநிலத்தையாவது பிரித்து, தனி நாடு அமையுங்கள் என்றா நான் கேட்டேன். நான் தேச பக்தி மிகுந்தவள். தேச பக்தியை பற்றி கபில் சிபல் எனக்கு, பயிற்சி அளிக்கத் தேவையில்லை. இலங்கையில் தமிழ் ஈழம் அமைக்க வேண்டும் என்றுதான் நான் சொன்னேன். அது எவ்வகையில் இந்திய சட்டங்களுக்கு எதிரானதாகும்? எ‌ன்று ஜெயலலிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil