இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்த நிறுத்தக் கோரியும், உடனடியாக அங்கு போர் நிறுத்தம் அறிவிக்க கோரியும் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி சென்னையில் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
சென்னை அண்ணா நினைவிடத்தில் இன்று காலை 7 மணி முதல் உண்ணாவிரதத்தை முதலமைச்சர் தொடங்கினார்.
வீல் சேரில் அமர்ந்தபடி உண்ணாவிரதம் இருந்து வந்த கருணாநிதியின் அருகிலேயே படுக்கையும் போடப்பட்டிருந்தது. அவரது மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஆகியோரும் உடன் அமர்ந்துள்ளனர். அருகில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் ஆகியோர் இருக்கின்றனர்.
காலை 9 மணியளவில் அவருக்கு மருத்துவ பிரசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அவரை படுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து படுத்தபடி அவர் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்.
தகவல் அறிந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அண்ணா சமாதியில் குவிந்துள்ளனர். அவர்கள் இலங்கை அதிபருக்கு எதிராகவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷமிட்டபடி உள்ளனர்.
உண்ணாவிரதம் இருந்து வரும் முதலமைச்சர் கருணாநிதிக்கு அவ்வபோது மருத்துவ பரிசோதனையும் நடந்து வருகிறது. வெயில் கொடுமையிலிருந்து தப்பிக்க அவருக்கு ஏர் கூலர்களும் பேன்களும் வைக்கப்பட்டுள்ளன.
அரை மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவர்கள் கருணாநிதியை பரிசோதனை செய்து வருகின்றனர். உண்ணாவிரதத்தையொட்டி சென்னை மெரினாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே முதலமைச்சர் கருணாநிதியுடன் பிரதமர் மன்மோகன்சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார்.
பிரதமரின் கோரிக்கையை நிராகரித்த கருணாநிதி, எல்லாரும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். இதற்காக என் உயிர் போனாலும் பரவாயில்லை என்று கூறினார். இதை தொடர்ந்து பிரதமரின் விஷேச தூதர் சென்னை வரவிருக்கிறார்.